செய்திகள்

பஞ்சாப்: பனிப்புகையினால் அதிகரிக்கும் சாலை விபத்துகள் - 3 நாட்கள் பள்ளிகளை மூட அரசு உத்தரவு

Published On 2017-11-08 17:38 GMT   |   Update On 2017-11-08 17:39 GMT
பஞ்சாப் மாநிலத்தில் பனிப்புகையினால் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதையடுத்து மாநிலம் முழுவதும் மூன்று நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சண்டிகர்:

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது, டெல்லியை ஒட்டியுள்ள அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது. வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் இன்று காலை எழுந்த மக்களுக்கு பெரும் பனிமூட்டம், காற்று மாசுபாடு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

இந்த பனிப்புகையினால் சாலையில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலையில் செல்லும் வாகனங்கள் சரியாக தெரியாததால் விபத்துகள் அதிகரித்து வருவதையடுத்து டெல்லியில் பள்ளிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.



இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்திலும் பனிப்புகையினால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்த விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர். இன்று பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டா - சண்டிகர் நெடுஞ்சாலையில் பள்ளிப்பேருந்து, மினி பேருந்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 14 பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர்.

இதையடுத்து அம்மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூன்று நாட்களுக்கு மூட அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை (9-ம் தேதி) முதல் 11-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் கல்வி மந்திரி அருணா சவுத்ரி தெரிவித்தார்.
Tags:    

Similar News