செய்திகள்

கருப்பு பணத்துக்கு எதிராக காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை: மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்

Published On 2017-10-30 03:47 GMT   |   Update On 2017-10-30 03:47 GMT
“50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போதிலும், கருப்பு பணத்துக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தவறிவிட்டது” என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டினார்.
புனே:

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று புனேயில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 8-ந் தேதியை ‘கருப்பு பண எதிர்ப்பு தின’மாக கடைப்பிடிக்க பாரதீய ஜனதா முடிவு எடுத்து இருக்கி றது. அதே நாளை ‘கருப்பு தின’மாக அனுசரிக்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பது எனக்கு வியப்பு அளிக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு சாமானிய மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.



நேர்மையற்றவர்கள், இந்த நடவடிக்கையால் சிரமத்துக்கு ஆளானார்கள். அவர்களுக்காக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது. காங்கிரஸ் அதன் 50 ஆண்டுகால ஆட்சியில், கருப்பு பணத்துக்கு எதிராக துணிச்சலான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், பா.ஜனதா வெறும் 3 ஆண்டுகளில் கருப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.

கருப்பு பண பொருளாதாரத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும். எதிர்காலத்திலும், கருப்பு பண அச்சுறுத்தலை ஒழிக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். கருப்பு பணத்துக்கு எதிராக சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி) ஏற்படுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட போதிலும், அதனை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏற்கவில்லை.



பா.ஜனதா ஆட்சி பொறுப்பு ஏற்ற உடனே சிறப்பு புலனாய்வு பிரிவை ஏற்படுத்தியது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஊக்கம் பெற்றன. வரிசெலுத்துபவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
Tags:    

Similar News