செய்திகள்

ஈராக்கில் மாயமான இந்தியர்களின் உறவினர்களிடம் டி.என்.ஏ. சேகரிப்பு

Published On 2017-10-21 22:56 GMT   |   Update On 2017-10-21 22:56 GMT
ஈராக் நாட்டில் மாயமான இந்தியர்களின் உறவினர்களிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெய்ப்பூர்:

ஈராக் நாட்டில் மாயமான இந்தியர்களின் உறவினர்களிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈராக் நாட்டில் உள்ள மொசூல் நகரம் கடந்த 2014–ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போது அந்த பகுதியில் பணிபுரிந்து வந்த இந்திய தொழிலாளர்கள் 39 பேரை ஐ.எஸ். தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

இதற்கிடையே, ஈராக் ராணுவத்துக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் நடந்த சண்டை கடந்த ஜூலையில் முடிவுக்கு வந்தது. அங்குள்ள மொசூல் நகரம் அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனாலும், கடத்திச் செல்லப்பட்ட இந்திய தொழிலாளர்களின் நிலை பற்றி தெரியவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈராக்கில் மாயமான 39 இந்தியர்களில் 22 பேர் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்த்சரஸ், குருதாஸ்பூர், கபுர்தலா மற்றும் ஜலந்தர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் வசித்துவரும் மாயமான இந்தியர்களின் உறவினர்களிடம் டி.என்.ஏ. மாதிரிகளை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மத்திய அரசின் சுகாதார துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் பஞ்சாப் வந்து மாயமான இந்தியர்களின் உறவினர்களிடம் இருந்து டி என் ஏ மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த மாதிரிகள் ஐதராபாத்தில் உள்ள பாரன்சிக் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News