செய்திகள்

தேர்தல் தேதி அறிவிக்காத சர்ச்சை நிலையில் பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம்

Published On 2017-10-21 14:17 GMT   |   Update On 2017-10-21 14:17 GMT
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நாளை மீண்டும் குஜராத் மாநிலத்திற்கு செல்கிறார்.

புதுடெல்லி: 

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 9ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அம்மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும், டிசம்பர் 18ம் தேதிக்குள், குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால், குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டால் தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளதாக விமர்சனம் செய்து வருகிறது.

குஜராத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களைக் கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை அம்மாநில பா.ஜ.க அரசு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் சமூக தளத்தில் ஐந்தாவது முறையாக குஜராத் செல்ல உள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிரச்சார கூட்டத்தில் குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்கும் அதிகாரத்தை அவருக்கு தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது என்று கூறியுள்ளார். குஜராத்தில் பா.ஜ.க அரசு இறுதி கட்டமாக இலவசங்களை அறிவிக்கவும், பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டம் நடைபெறவும், சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவிக்காமல் தேர்தல் ஆணையம் கால தாமதம் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

இந்நிலையில், பிரதமர் மோடி குஜராத் செல்ல உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் செல்லும் மோடி, பாவ்நகர் மாவட்டம் கோகாவில் இருந்து தஹேஜ் வரை கடல்பகுதியில் ரூ.615 கோடி செலவில் விசைப்படகு சேவையை தொடங்கி வைக்க உள்ளார். பின்னர், வடோதரா செல்லும் அவர் ரூ.1,140 கோடி மதிப்பீட்டில் மான் பூங்கா, இரண்டு மேம்பாலங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையம், விலங்குகள் மருத்துவமனை உள்ளிட்ட 8 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News