செய்திகள்

உடனடி நிவாரணம் தரும் ஆயுர்வேத மருந்துகளை கண்டுபிடிக்கவேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

Published On 2017-10-17 08:13 GMT   |   Update On 2017-10-17 08:13 GMT
அனைத்திந்திய ஆயுர்வேத கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, உடனடி நிவாரணம் தரும் மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
புதுடெல்லி:

தேசிய ஆயுர்வேத நாளான இன்று டெல்லியில் உள்ள அனைத்திந்திய ஆயுர்வேத கல்வி நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பின்னர் அங்கு கூடியிருந்த மக்களிடையே அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆயுர்வேதம் நமது பண்டைய மருத்துவ முறையாகும். நாம் அதை மறந்து விட்டு ஹோமியோபதி முறைக்கு மாறிவிட்டோம். ஆனால் தற்போது ஆயுர்வேதம் மீண்டும் உயிர் பெற்று வருகிறது. அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நாட்டில் உள்ள பல மாவட்டங்களின் மருத்துவமனையில் பாரம்பரிய மருத்துவ முறைகள் இடப்பெற்றுள்ளன.

அதன் ஒரு பகுதியாக அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயுர்வேத மருத்துவம் அனைவருக்கும் சென்றடையும். ஆயுர்வேதத்தில் நோயாளிகள் விரைவில் குணமடையும் விதமாக பக்க விளைவு இல்லாத புதிய மருந்துகளை மருத்துவர்கள் கண்டு பிடிக்க வேண்டும். மருத்துவ தாவரங்களை வளர்ப்பதன் மூலம் புதிய வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.

தனியார் நிறுவனங்கள் அரசுடன் இணைந்து ஆயுர்வேதத்தை வளர்க்க வேண்டும். சுகாதாரமாக இருப்பதன் மூலம் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கலாம். நாட்டில் ஆயுர்வேத மருத்துவமனைகள் தொடங்குவதற்கு அரசு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு மோடி பேசினார்.

மேலும், மோடி அனைவருக்கும் தீபாவளி மற்றும் தேசிய ஆயுர்வேதா நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
Tags:    

Similar News