செய்திகள்

பயணிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதற்கு ரெயில்வே உணவு காரணமில்லை - அதிகாரிகள் தகவல்

Published On 2017-10-16 23:40 GMT   |   Update On 2017-10-16 23:40 GMT
தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதற்கு ரெயில்வே உணவு காரணமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை:

கோவாவில் இருந்து மும்பைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில், ரெயில்வேக்கு சொந்தமான உணவை வாங்கி சாப்பிட்ட 26 பயணிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட 26 பயணிகளும் மும்பையில் இருந்து 260 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிபுலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த 26 பேரில் 6 வயது சிறுவனும் அடங்கும். 3 பேர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் சாப்பிட்ட உணவில் வி‌ஷத்தன்மை ஏற்பட்டதால் 26 பயணிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்டது. தொங்கன் ரெயில்வே துறை இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது. முதல் காட்டமாக இந்தியன் ரெயில்வே கேட்ரிங் மற்றும் சுற்றுலா கழகத்தை சேர்ந்த 2 அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரி ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த சோதனையில் உணவு தரத்தில் எந்த குறைபாடும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த ரெயில் பெட்டியில் பயணித்த இரண்டு சிறுவர்களால் இந்த பிரச்சினை வந்துள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து சுற்றுலா வந்த குழுவை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் முதலில் வாந்தி எடுத்துள்ளனர்.  அது ஏ.சி. பெட்டி என்பதால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் இரண்டு சிறுவர்கள் வாந்தி எடுத்துள்ளனர். இது மேலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இதுவே பயணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட காரணம்  என ரெயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Tags:    

Similar News