செய்திகள்

அரியானா சாமியார் வளர்ப்பு மகளுக்கு 23-ம் தேதிவரை நீதிமன்ற காவல்

Published On 2017-10-13 12:29 GMT   |   Update On 2017-10-13 12:29 GMT
கற்பழிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் அரியானா சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனி பிரீத் 23-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
சண்டிகர்:

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டது.

இந்த வன்முறையில் 38-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். வன்முறையின் போது குர்மீத்தின் ஆதரவாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததோடு, பொதுச் சொத்துக்களையும் பெருமளவில் சேதப்படுத்தினர்.

இந்த கலவரம் தொடர்பாக அரியானா மாநில போலீசார் 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இவர்களில் முதலிடத்தில் இருந்த குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனி பிரீத் இன்சான் தலைமறைவானார்.

இதற்கிடையில், பஞ்சாப் மாநிலம், ஜிராக்பூர்-பாட்டியாலா சாலையில் ஹனி ப்ரீத்தை கடந்த 4-ம் தேதி கைது செய்த அரியானா மாநில போலீசார் பஞ்சகுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆறுநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர், அவரது காவல் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், பஞ்சகுலா நீதிமன்றத்தில் ஹனி பிரீத் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 23-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News