செய்திகள்

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.யால் இந்திய வளர்ச்சி மேலும் சரியும்: பன்னாட்டு நிதியம் - உலக வங்கி தகவல்

Published On 2017-10-11 10:28 GMT   |   Update On 2017-10-11 10:28 GMT
பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரியால் இந்தியா வளர்ச்சி மேலும் சரியும் என பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகியவை வெளியிட்டுள்ள கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதுடெல்லி:

உயர் மதிப்பு ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி அமல் போன்றவற்றின் காரணமாக ஏற்கனவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிந்து வருவதாக பொருளாதார கணிப்புகள் கூறுகின்றன.

மத்திய அரசின் அமைப்பான புள்ளியல் துறை சமீபத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சி விகித அறிக்கையை வெளியிட்டது.

அதில், கடந்த சில ஆண்டுகளை விட உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் சரிந்து வருவதாக கூறப்பட்டது. அதாவது கடந்த காலாண்டில் 6.1 சதவீதம் வளர்ச்சி விகிதம் இருப்பதாக அதில் கூறப்பட்டது.

இந்த நிலையில் பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகியவை வெளியிட்டுள்ள கணிப்பில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட சரியும் நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கியின் ஒரு வார ஆய்வு கூட்டம் வாஷிங்டனில் நடை பெற்றது. இதில், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் எதிர்கால வளர்ச்சிகள் எப்படி இருக்கும்? என்று தற்போது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 2017-ம் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும். இது, ஏற்கனவே எடுக்கப்பட்ட கணிப்பை விட 0.5 சதவீதம் குறைவானது என்று கூறப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு இந்திய வளர்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது. அதை விட இப்போது சரிகிறது.

அதேபோல் 2018-ம் ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாக இருக்கும். அது ஏற்கனவே எடுக்கப்பட்ட கணிப்பில் இருந்து 0.3 சதவீதம் குறைவானதாகும்.

இந்தியா- சீனா இடையே பொருளாதார வளர்ச்சி போட்டி கடுமையாக இருந்து வந்தது. அதில், பல தடவை இந்தியா முந்தி சென்றது.

ஆனால், இந்த ஆண்டுக்கான வளர்ச்சியில் சீனா 6.8 சதவீதமாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இது ஏற்கனவே எடுக்கப்பட்ட கணிப்பை விட 0.1 சதவீதம் அதிகம் ஆகும். இதன் மூலம் இந்தியாவை சீனா முந்தி செல்கிறது.

உள்நாட்டு வர்த்தக வீழ்ச்சி, சீரமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் போன்றவை பொருளாதார வளர்ச்சியை பாதித்து இருப்பதாக பன்னாட்டு நிதியம் கூறி உள்ளது. அதாவது பண மதிப் பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி போன்றவற்றின் மூலம் பாதிப்பு உருவாகி இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1989-ல் இருந்து 2008 வரை சரா சரியாக 6.9 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு வளர்ச்சி விகிதம் மேலும் அதிகரித்தது. இப்போது படிப்படியாக குறைந்துள்ளது.

2009-ம் ஆண்டு இந்திய வளர்ச்சி விகிதம் 8.5 சதவீதமாகவும், 2010-ல் 10.3 சதவீதமாகவும், 2011-ல் 6.6 சதவீதமாகவும், 2012-ல் 5.5. சதவீதமாகவும், 2013-ல் 6.4. சதவீதமாகவும், 2014-ல் 7.5 சதவீதமாகவும், 2015-ல் 8 சதவீதமாகவும், 2016-ல் 7.1 சதவீதமாகவும் வளர்ச்சி விகிதங்கள் இருந்தன.

2022-ல் இந்தியாவின் வளர்ச்சி 8.2 சதவீதத்துக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பன்னாட்டு நிதியம் அறிக்கை தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News