செய்திகள்

லாபம் பல மடங்கு உயர்ந்ததாக செய்தி: அமித்ஷா மகன் தொடர்ந்த அவதூறு வழக்கு ஒத்திவைப்பு

Published On 2017-10-11 10:17 GMT   |   Update On 2017-10-11 10:17 GMT
தனது நிறுவனத்தின் லாபம் பல மடங்கு உயர்ந்ததாக செய்தி வெளியிட்ட இணையதள ஆசிரியர் உள்ளிட்ட 7 பேர் மீது அமித்ஷா மகன் ஜெய்ஷா தொடர்ந்த அவதூறு வழக்கு 16-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் மகனுக்கு சொந்தமான டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவே லிமிடெட் நிறுவனம் முந்தைய 2013-14-ம் நிதி ஆண்டில் 80 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருந்தது. ஆனால், 2015-16-ம் நிதி ஆண்டில் அந்த தொகையைவிட 16 ஆயிரம் மடங்கு லாபத்தை அந்நிறுவனம் ஈட்டியுள்ளது என தனியார் இணையதள ஊடகம் ஒன்றில் செய்திகள் வெளியானது.

இவ்விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், இந்த செய்தியை மறுத்த பா.ஜ.க சம்பந்தப்பட்ட இணையதள ஆசிரியர் மற்றும் நிர்வாகி மீது 100 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என மத்திய மந்திரி பியுஷ் கோயல் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அகமதாபாத் நீதிமன்றத்தில் சம்மந்தப்பட்ட இணையதள ஊடக ஆசிரியர், உரிமையாளர், கட்டுரையாளர் உள்ளிட்ட 7 பேர் மீது அமித்ஷா மகன் ஜெய்ஷா நேற்று முன் தினம் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு வரும் 16-ம் தேதி வரை (திங்கள் கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News