செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் ஐகோர்ட் நீதிபதி திடீர் ராஜினாமா

Published On 2017-09-26 10:47 GMT   |   Update On 2017-09-26 10:47 GMT
கர்நாடக மாநிலத்தில் ஐகோர்ட் நீதிபதி ஜெயந்த் பட்டேல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியவர் ஜெயந்த் பட்டேல். குஜராத் மாநில பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்ட பட்டேல், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கர்நாடக ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். சமீபத்தில் அலகாபாத் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு விரைவில் புறப்பட இருந்த நிலையில், திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார் பட்டேல். இதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

தனது ராஜினாமா கடிதத்தை ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜிக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளதாக ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது. தற்போதைய நீதிபதி பொறுப்பில் இருந்து அக்டோபர் 9-ம் தேதி ஓய்வு பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது ராஜினாமா கடிதம் மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத், இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள பட்டேல், தொடர்ந்து பணியாற்றினால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறுவார். சீனியாரிட்டி இருந்தும் தனக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வழங்கப்படாததால் படேல் அதிருப்தியில் இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் ராஜினாமா செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டவர் நீதிபதி பட்டேல் என்பது குறிப்படத்தக்கது.
Tags:    

Similar News