செய்திகள்

பாராளுமன்றம் அருகே பறந்த குட்டி விமானம்: டெல்லி போலீசார் அதிர்ச்சி

Published On 2017-09-25 07:16 GMT   |   Update On 2017-09-25 07:16 GMT
பாராளுமன்ற வளாகம் அருகே ஆளில்லாத குட்டி விமானம் பறந்ததாக போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு தகவல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி:

டெல்லியில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆள் இல்லாத குட்டி விமானங்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இத்தகைய ஆள் இல்லா குட்டி விமானத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி விடக்கூடாது என்பதற்காக டெல்லி போலீசார் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

என்றாலும் தடையை மீறி அடிக்கடி குட்டி விமானங்கள் பறப்பதாக டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்கள் வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட தடவை குட்டி விமானங்கள் பறந்ததாக புகார்கள் வந்தன.

இந்த நிலையில் சமீபத்தில் அடுத்தடுத்து 3 தடவை ஆள் இல்லா விமானங்கள் பறந்ததாக புகார்கள் வந்தன. டெல்லி விமான நிலையத்தில் விமானத்தை தரை இறக்க முயலும்போது அத்தகைய குட்டி விமானங்கள் பறப்பதாக பைலட்டுகளும் புகார்களை பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே ஆள் இல்லா குட்டி விமானம் ஒன்று பாராளுமன்றம் அருகே பறந்து சென்றதாக ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். பாதுகாப்பு மிகுந்த பாராளுமன்றம் பகுதியில் மிக தாழ்வாக அந்த குட்டி விமானம் பறந்து சென்றதாக கூறப்படுகிறது.

டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறை மூலம் அந்த குட்டி விமானத்தை கண்டுபிடிக்க முயற்சி நடந்தது. ஆனால் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் குட்டி விமானம் பறப்பது எதுவும் பதிலாகவில்லை.

இதையடுத்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில் அடுத்தடுத்து ஆள் இல்லா குட்டி விமானங்கள் பறப்பதாக வரும் தகவல்கள் டெல்லி போலீசாரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News