செய்திகள்

பா.ஜ.க. தேசிய செயற்குழு தொடங்கியது: 1400 எம்.எல்.ஏ.க்கள் - 337 எம்.பி.க்கள் பங்கேற்பு

Published On 2017-09-24 07:47 GMT   |   Update On 2017-09-24 07:47 GMT
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கியது. பிரதமரின் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
புதுடெல்லி:

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் பல மாநிலங்களில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களாக பொறுப்பு வகிக்கும் 1400 பேர், சில மாநிலங்களில் உள்ள சட்டமன்ற மேல்சபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற இரு அவைகளை சேர்ந்த 337 எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர்.

இதுதவிர, அனைத்து மாநில பா.ஜ.க. தலைவர்கள் செயலாளர்கள் என இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்ளும் நாளைய கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

இந்துத்வா தத்துவத்தின் அடையாளமாக விளங்கிய மறைந்த தீன் தயாள் உபாத்யாயாவின் நூறாவது பிறந்தநாளான நாளை (25-ம் தேதி) நாட்டின் அடித்தட்டு மக்களும் பயனடையும் வகையில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட பிரதமரின் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரியவந்துள்ளது.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை வெற்றிகரமாக அமல்படுத்திய மத்திய அரசின் நடவடிக்கை மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகள் பிரச்சனை தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது.
Tags:    

Similar News