செய்திகள்

18 எம்.எல்.ஏக்கள் பெயரை அரசு இணைய தளத்தில் இருந்து நீக்கியது கண்டிக்கத்தக்கது: தங்கதமிழ்செல்வன்

Published On 2017-09-24 05:39 GMT   |   Update On 2017-09-24 05:39 GMT
18 பேரின் பெயர்கள், படங்கள் சட்டசபை இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதற்கு தினகரன் ஆதரவாளர் தங்க. தமிழ்ச்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதில் ஜக்கையன் மட்டும் பின்னர் அந்த அணியில் இருந்து விலகி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் சபாநாயகர் முன்பு ஆஜர்ஆகி விளக்கம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து ஜக்கையன் தவிர மற்ற 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து கடந்த 18-ந் தேதி சபாநாயகர்  தனபால் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தகுதி நீக்க உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதிக்கவில்லை. ஆனால் தேர்தல் பணிகளை தொடங்கவும், சட்டசபையில் பொதுவாக்கெடுப்பு நடத்த தொடர்ந்து தடை விதித்தும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மீண்டும் வருகிற 4-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

தமிழக சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன், ஆண்டிப்பட்டி தங்க தமிழ்செல்வன், பெரம்பூர்  வெற்றிவேல், திருப்போரூர்  கோதண்டபாணி, பூந்தமல்லி  ஏழுமலை, ஜெயந்தி பத்மநாபன், கதிர்காமு, பார்த்திபன், ஆர்.ஆர்.முருகன், உமாமகேஸ்வரிஉள்பட 18 பேரின் பெயர்கள், படங்கள் சட்டசபை இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், அவர்களின் தொகுதிகளும் காலியாக உள்ளதாக இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் பெயர்கள் அரசு இணைய தளத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து மைசூரு குடகு விடுதியில் தங்கி உள்ள தங்கதமிழ்செல்வனிடம் இன்று கேட்டபோது அவர் கூறியதாவது:-

சட்டத்தை மதிக்கிறவர்கள் யாரும் ஆட்சி அதிகாரத்தில் கிடையாது. சட்டத்தை மதிக்காதவர்கள் ஆட்சி நடத்தி வருகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாத,  தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற  எண்ணத்தோடுதான் ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போதே அரசு இணைய தளத்தில் இருந்து 18 பேரையும் நீக்கி இருப்பது கண்டிக்கத்தக்கது.

சட்டத்தை மதிக்காதவர்கள் ஆட்சியில் இருக்கும் போது இதைத்தான் எதிர்பார்க்க முடியும். வேறு எதை எதிர்பார்க்க முடியும். தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்யும் துரோக கும்பலுக்கு வருங்காலத்தில் மக்கள் நல்ல பதில்அடி கொடுப்பார்கள். மக்கள் மன்றத்தில் மட்டும் அல்ல நீதிமன்றத்திலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News