செய்திகள்

சட்ட விரோதமாக குடியேறியவர்கள்: ‘ரோஹிங்யா முஸ்லிம்கள் நாடு கடத்தப்படுவார்கள்’ - ராஜ்நாத் சிங் உறுதி

Published On 2017-09-22 00:06 GMT   |   Update On 2017-09-22 00:07 GMT
ரோஹிங்யா முஸ்லிம்கள் சட்ட விரோதமாக குடியேறி இருப்பதாகவும், அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

ரோஹிங்யா முஸ்லிம்கள் சட்ட விரோதமாக குடியேறி இருப்பதாகவும், அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் எனவும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மியான்மரில் வசித்து வரும் சிறுபான்மை முஸ்லிம்களான ரோஹிங்யாக்களுக்கு எதிராக ராணுவமும், பிற பிரிவினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மரை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்தியாவிலும் டெல்லி, உத்தரபிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமான ரோஹிங்யாக்கள் குடியேறி உள்ளனர். ஆனால் இவர்களை நாடு கடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால் ரோஹிங்யா முஸ்லிம்கள் அனைவரும் சட்ட விரோத குடியேறிகள் எனவும் அவர்களை திருப்பி அனுப்ப அரசு கொள்கை முடிவு எடுத்து இருப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் டெல்லியில் மனித உரிமை ஆணையம் சார்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

இந்தியாவில் குடியேறியிருக்கும் ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல. ஏனெனில் அகதி நிலையை பெறுவதற்கு அவர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பித்து இருக்க வேண்டும். ஆனால் எந்த ஒரு ரோஹிங்யாவும் இந்தியாவிடம் இருந்து அடைக்கலம் பெறவும் இல்லை. அதற்காக விண்ணப்பிக்கவும் இல்லை.

இவர்கள் அனைவரும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள். எனவே அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களை ஏற்றுக்கொள்வதாக மியான்மரும் கூறியுள்ளது. அப்படியிருக்க ரோஹிங்யா முஸ்லிம்களை திருப்பி அனுப்புவதற்கு சிலர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்? என்று தெரியவில்லை.

பிற நாட்டினரின் மனித உரிமைகள் குறித்து பேசுவதற்கு முன், நமது சொந்த மக்களின் மனித உரிமைகள் குறித்துதான் நாம் பேச வேண்டும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார். 
Tags:    

Similar News