செய்திகள்

முந்தைய காங். அரசிடம் அளிக்கப்பட்ட கருப்பு பணம் குறித்த அறிக்கைகள் ஆய்வு செய்யப்படும்: மத்திய நிதி அமைச்சகம் தகவல்

Published On 2017-09-20 21:36 GMT   |   Update On 2017-09-20 21:36 GMT
இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பதுக்கிய கருப்பு பணம் குறித்து முந்தைய காங்கிரஸ் அரசிடம் அளிக்கப்பட்ட அறிக்கைகள் ஆய்வு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பதுக்கிய கருப்பு பணம் குறித்து முந்தைய காங்கிரஸ் அரசிடம் அளிக்கப்பட்ட அறிக்கைகள் ஆய்வு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கருப்பு பணம் விவகாரம் குறித்து மத்திய நிதி அமைச்சகத்திடம் தகவல் உரிமை சட்டத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதில் அளித்து மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்த விபரம் வருமாறு:-

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது குறித்து முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசிடம் தன்னாட்சி அமைப்புகளான தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம் 2013-ம் ஆண்டும், தேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் 2014-ம் ஆண்டு ஜூலையிலும், தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் அதே ஆண்டு ஆகஸ்டு மாதத்திலும் அறிக்கைகளை சமர்ப்பித்தன.

அந்த அறிக்கைகள் பாராளுமன்ற நிலைக்குழு முன்பு ஏற்கனவே அளிக்கப்பட்டு விட்டது. நிலைக்குழு மூலமாக பாராளுமன்றத்தில் அந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும். அதில் உள்ள முக்கிய அம்சங்களை தகவல் உரிமை சட்டத்தின்படி வெளியிட முடியாது. அந்த தகவலை வெளியிடுவது பாராளுமன்ற உரிமை மீறல் ஆகும்.

கருப்பு பணம் எவ்வளவு உள்ளது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக மதிப்பிடவில்லை. அமெரிக்காவில் உள்ள சர்வதேச நிதி ஒருங்கிணைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2005-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை சுமார் ரூ.50 லட்சம் கோடி கருப்பு பணம் இந்தியாவில் நுழைந்ததாக தெரிவித்து உள்ளது. அதே காலத்தில் சுமார் ரூ.10 லட்சம் கோடி கருப்பு பணம் சட்டவிரோதமாக வெளியேறியதாக கூறி இருக்கிறது.

ஆனால் அமெரிக்க நிறுவனம் அளித்த மதிப்பு அனைத்தும் உறுதியானது அல்ல. தோராயமாக வெளியிடப்பட்டு உள்ளது. எனவே தன்னாட்சி அமைப்பான 3 நிறுவனங்கள் முந்தைய அரசிடம் அளிக்கப்பட்ட அறிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படும். அதன் பின்னர் கருப்பு பணம் குறித்து மதிப்பிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News