செய்திகள்

அரசியல் சாசன சோதனையை கடந்து ஆதார் திட்டம் மூலம் மக்களுக்கு சிறந்த பயன் கிடைக்கும்: அருண் ஜெட்லி நம்பிக்கை

Published On 2017-09-13 18:38 GMT   |   Update On 2017-09-13 18:38 GMT
அரசியல் சாசன சோதனையை கடந்து ஆதார் திட்டம் மூலம் மக்களுக்கு சிறந்த பயன் கிடைக்கும் என அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

அரசியல் சாசன சோதனையை கடந்து ஆதார் திட்டம் மூலம் மக்களுக்கு சிறந்த பயன் கிடைக்கும் என அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்து வருகிறது. ஆனால் குடிமக்களின் அந்தரங்கம் காப்பது அடிப்படை உரிமை என ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.

எனினும் அரசியல் சாசன சோதனையை கடந்து ஆதார் திட்டம் மக்களுக்கு அதிக பலன் அளிக்கும் என நிதி மந்திரி அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். டெல்லியில் நேற்று நடந்த நிதி சேர்ப்பு தொடர்பான ஐ.நா. ஆலோசனை கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் இது குறித்து கூறியதாவது:-



ஆதார் திட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வந்ததாக இருந்தாலும், வெறும் தனிப்பட்ட அடையாள எண் பற்றிய வரைவுச்சட்டம் மட்டுமே அப்போது வகுக்கப்பட்டு இருந்தது. அதன் பயன்பாடு பற்றிக்கூட குறிப்பிடப்படவில்லை.

ஆனால் பா.ஜனதா ஆட்சியில் ஆதார் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது அரசியல் சாசன சோதனைகள் அனைத்தையும் கடந்து மக்களுக்கு சிறந்த பயன் தரும். பல்வேறு அரசின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தி வரும் ஆதார் திட்டம் அதிக பலன்களை அளித்து வருகிறது.

மத்திய அரசின் ஜன்தன் திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 30 கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வங்கி கணக்குகள் தொடங்கியுள்ளனர்.

இதில் பூஜ்ஜிய கையிருப்பு கொண்ட கணக்குகளின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 77 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

அரசின் நேரடி மானிய திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம், பூஜ்ஜிய கையிருப்பு கணக்குகளும் செயல்பாட்டுக்கு வரும். தகுதியானவர்களுக்கு மானியங்கள் சென்று சேரவேண்டியது மிகவும் முக்கியம்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொண்டது முதல் ரொக்க பரிமாற்றம் குறைக்கப்பட்டு, கார்டுகள் மூலமான பரிமாற்றம் அதிகரித்து உள்ளது. இதன் மூலம் முறையான வணிக நடைமுறையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார். 
Tags:    

Similar News