செய்திகள்

கேரளாவில் கனமழை நீடிப்பு: கடல்நீர் கிராமத்துக்குள் புகுந்ததால் வீடுகள் இடிந்து 65 மீனவர்கள் காயம்

Published On 2017-09-13 10:27 GMT   |   Update On 2017-09-13 10:27 GMT
கேரளாவில் கன மழையால் கடல்நீர் கிராமத்துக்குள் புகுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. இதில் 65 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த ஆண்டு மழை பொய்த்ததால் அங்கு வறட்சி ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் கனமழையாக கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக இந்த மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகள், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் மாநிலம் முழுவதும் இந்த மழை நீடிப்பதால் பல இடங்களில் ஆறுகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு உள்ளது.

இந்த மழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் தம்பானூர் பகுதியில் ஏராளமான மரங்கள் சாலையில் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் மரக்கிளைகள் விழுந்ததில் மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் தம்பானூரில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளானார்கள். திருவனந்தபுரம் கரமனை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

பாலக்காட்டில் விளை நிலங்களை மழை வெள்ளம் மூழ்கடித்ததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.

கேரளாவின் கோவளம், விழிஞ்ஞம், சிறையின்கீழ் போன்ற மீனவர் கிராமங்கள் உள்ள பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. சிறையின்கீழ் அருகே உள்ள முதலைப்புழா என்ற இடத்தில் கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்த 6 வள்ளங்களை கடல் அலை இழுத்துச்சென்றது. அப்போது ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் சில வள்ளங்கள் உடைந்து சிதறியது. மேலும் கடல்நீர் அங்குள்ள மீனவர் கிராமங்களில் புகுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. இதில் 65 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இந்த தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் அங்கு சென்று மீனவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. பலத்த மழை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News