செய்திகள்

எகிப்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்: 9 போலீஸ்காரர்கள் உயிரிழப்பு

Published On 2017-09-11 13:37 GMT   |   Update On 2017-09-11 13:37 GMT
எகிப்தில் இன்று தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கெய்ரோ:

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தின் ஆரிஷ் நகர் அருகே போலீசார் இன்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற பதையில் புதைத்து வைத்திருந்த குண்டு திடீரென வெடித்துச் சிதறியது. இதில், போலீசாரின் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. அதில் இருந்த போலீஸ்காரர்களில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் மூன்று கவச வாகனங்கள் மற்றும் ஒரு சிக்னல் செயலிழப்பு வாகனம் ஆகியவை சேதமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக, அதன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர் முகமது முர்சியின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்ததையடுத்து, தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஏராளமான ராணுவ வீரர்களும், போலீஸ்காரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்றைய தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சகம் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே சண்டை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags:    

Similar News