செய்திகள்

சாகச பயணமாக உலகை சுற்றப்போகும் கடற்படை வீராங்கனைகள் - பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2017-09-10 09:54 GMT   |   Update On 2017-09-10 12:41 GMT
சாகச பயணமாக கடல் வழியில் உலகை சுற்றிவர இருக்கும் இந்திய கடற்படையில் பணியாற்றும் 6 வீராங்கனைகளை பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி:

இந்திய கடற்படையில் பணியாற்றிவரும் பெண்கள் தங்களது திறமைகளை பறைசாற்றும் விதமாக ஆண்டு தோறும் ஏதாவது சாகசத்தை நிகழ்த்தி வருவர். அதே போல் இந்த ஆண்டும் கடற்படை பெண்கள் பிரிவில் ஒரு குழுவினர் இமய மலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏற இருப்பதாகவும், மற்றொரு குழுவினர் கடற்படைக்கு சொந்தமான தாரினி படகு மூலம் உலகை கடல் வழியில் சுற்றி வர இருக்கின்றனர்.

6 வீராங்கனைகள் கொண்ட குழுவினர் ‘நவிகா சாகர் பரிக்ரமா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாகச பயணத்தில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், அக்குழுவினரை பிரதமர் மோடி இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, கடந்த மாதம் 27-ம் தேதி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய மோடி இந்த சந்திப்பு குறித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலில் காற்று வீசுவது சீராக இருப்பதால் இம்மாதத்தில் இந்த பயணம் தொடங்குவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் ஞாயிறு அன்று கோவா மாநிலம் பணாஜியிலிருந்து தொடங்கும் இந்த சாகச பயணம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் நிறைவடைய இருக்கிறது.



5 கட்டங்களாக நடைபெறும் இந்தப் பயணத்தில், எரிபொருள் நிரப்புவது, பராமரிப்பு பணிகள் ஆகியவற்றுக்காக, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் துறைமுகங்களில் அந்தக் கப்பல் நிறுத்தப்படும் என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தாரினி படகு இந்த பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது சிறப்புக்குரிய அம்சமாகும். ஏற்கனவே, கடந்தாண்டு இதேபோல உலகின் முக்கிய கடற்படை தளங்களை பாய்மரப்படகில் பெண்கள் குழுவினர் சென்று பார்வையிட்டனர் என்பது சிறப்புக்குரியது.
Tags:    

Similar News