செய்திகள்

மருத்துவ கலந்தாய்வு: தமிழக அரசுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Published On 2017-09-04 23:45 GMT   |   Update On 2017-09-04 23:45 GMT
மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த தடை உத்தரவிற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
புதுடெல்லி:

நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை தாமதம் ஆனதால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சேரும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்கள். அப்படி நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மாணவர்கள், தமிழக அரசு நடத்தும் கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கையில் பங்கேற்க தமிழக அரசு தடை விதித்தது.

இந்த தடையை நீக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மாணவர்கள் தரப்பில் மூத்த வக்கீலும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவியுமான நளினி சிதம்பரம் ஆஜரானார். இவர், ஏற்கனவே நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தான் தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

நேற்று, விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், நீட் தொடர்பாக ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி தமிழக அரசிற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 
Tags:    

Similar News