செய்திகள்

கணவனின் கட்டாய உறவை கற்பழிப்பு குற்றம் ஆக்க கூடாது - டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

Published On 2017-08-30 01:01 GMT   |   Update On 2017-08-30 01:01 GMT
மனைவியை கட்டாயப்படுத்தி கணவன் உறவு கொள்வதை கற்பழிப்பு குற்றமாக்கிவிட கூடாது என டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி:

மனைவியிடம் கணவன் வலுக்கட்டாயமாக உறவு கொள்வதை இந்திய தண்டனை சட்டம் 375-வது பிரிவின் கீழ் கற்பழிப்பு குற்றமாக அறிவிக்கவேண்டும் என்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி(பொறுப்பு) கீதா மிட்டல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஒருவரின் சார்பில் வாதிட்ட மூத்த வக்கீல் கோலின் கோன்சால்வெஸ், “திருமணம் என்பது கற்பழிப்பு நடத்துவதற்காக அளிக்கப்பட்ட உரிமம் அல்ல” என்று வாதிட்டார். அப்போது மத்திய அரசு சார்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

ஒரு பெண்ணை அவளது கணவரும், அவருடைய மைத்துனிகளும் கொடுமைப்படுத்துவதை தடுக்க நடைமுறையில் உள்ள இந்திய தண்டனை சட்டப்பிரிவு 498ஏ தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக சுப்ரீம் கோர்ட்டும், பல்வேறு ஐகோர்ட்டுகளும் கருத்து தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில் மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொள்வதை கற்பழிப்பு குற்றமாக்கிவிட்டால் அது கணவன்மார்களை தொல்லை படுத்துவதற்கான கருவியாக மாறிவிடும். தவிர, இது திருமண பந்தத்தை சீர்குலைப்பதாக அமையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. மனுக்கள் மீதான விசாரணை இன்றும்(புதன்கிழமை) நடக்கிறது. 
Tags:    

Similar News