செய்திகள்

அரியானா, பஞ்சாப்பில் பரவிவரும் வன்முறைக்கு துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு கண்டனம்

Published On 2017-08-26 13:37 GMT   |   Update On 2017-08-26 13:37 GMT
கற்பழிப்பு வழக்கில் சாமியார் தண்டிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அரியானா மற்றும் பஞ்சாப்பில் பரவிவரும் வன்முறைக்கு துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்:

துணை ஜனாதிபதியாக வெங்கய்யா நாயுடு பதவியேற்ற பின்னர் முதன்முறையாக இன்று ஆந்திர மாநிலத்துக்கு வந்தார். அவருக்கு ஆந்திர அரசின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, கவர்னர் நரசிம்மன், விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக் கஜபதி ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு கற்பழிப்பு வழக்கில் சாமியார் தண்டிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அரியானா மற்றும் பஞ்சாப்பில் பரவிவரும் வன்முறைக்கு பலர் பலியான சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.

’சாதி, மதம், மொழி மற்றும் மண்டலங்களின் பெயரில் சிலர் வன்முறையை தூண்டி விடுகின்றனர். அவர்கள் வன்முறைப் பாதைக்குள் மக்களை தள்ளி விடுகின்றனர். ஜனநாயகத்தில் இதுபோன்ற செயல்பாடுகள் ஏற்புடையதல்ல. மிக உயரிய கலாசாரம் மற்றும் பாரம்பரியம் கொண்ட சுதந்திர இந்தியா என்ற உயர்ந்த நாட்டில் இதுபோன்ற சமூகத் தீண்டாமை இருப்பது வெட்கக்கேடானதாக உள்ளது.

இதுபோன்ற சமூக ஏற்றத் தாழ்வுகள் மற்றும் பாகுபாடுகளில் இருந்து இந்தியாவை நாம் மீட்டாக வேண்டும். பசி, படிப்பறிவின்மை, ஊழல் மற்றும் ஏற்றத் தாழ்வுகள் யாவும் ஒழிக்கப்பட்டால்தான் முன்னேறிய நாடு என்ற நிலைக்கு நாம் உரிமைகோர முடியும்’ என அவர் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News