செய்திகள்

தொடர் விபத்துக்கள்: ராஜினாமா செய்ய முன்வந்த ரெயில்வே துறை மந்திரி

Published On 2017-08-23 09:56 GMT   |   Update On 2017-08-23 09:56 GMT
தொடர் விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் பகுதியில் உட்கல் எக்ஸ்பிரஸ் ரெயில் தரம் புரண்ட விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, பா.ஜ.க. ஆட்சியில் அலட்சியம் காரணமாக ரெயில் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ஆனால் ரெயில்வே துறை அமைச்சகம் தரப்பில் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, டெல்லியிலிருந்து ஆஸம்கார் செல்லும் கைபியாத் விரைவு ரெயில் உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே இன்று அதிகாலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 60 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், தொடர் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் பிரபு, “உத்தரபிரதேசத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த ரெயில் விபத்துக்கள் வேதனை அளிக்கிறது. பிரதமர் மோடியை சந்தித்து ரெயில் விபத்துக்களுக்கு பொறுப்பேற்பதாக தெரிவித்தேன். மோடி தன்னை காத்திருக்குமாறு என்னிடம் தெரிவித்தார்” என்றார்.

ஏற்கனவே உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தொடர் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரெயில்வே வாரிய தலைவர் பொறுப்பில் இருந்து வினய் மிட்டல் ராஜினாமா செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News