செய்திகள்

டெல்லியில் விவசாயிகள் யோகா செய்து போராட்டம்

Published On 2017-08-21 23:11 GMT   |   Update On 2017-08-21 23:11 GMT
டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, நூதன முறையில் யோகாசன போராட்டம் நடத்தினார்கள்.
புதுடெல்லி:

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளின் அரை நிர்வாண போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டம் நேற்று 37-வது நாளை எட்டியது.

இதையொட்டி விவசாயிகள் மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, நூதன முறையில் யோகாசன போராட்டம் நடத்தினார்கள். பத்மாசனம், சிரசாசனம் உள்ளிட்ட ஆசனங்களை அவர்கள் செய்தனர். மேலும், ஒற்றைக்காலில் நின்று, ‘மோடி அய்யா மோடி அய்யா எங்களை ஒற்றைக்காலில் நிற்க வைத்து விட்டாயே அய்யா‘ என்று கோஷமிட்டனர்.

அதன் பின்னர் போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சில விவசாயிகள் ஜனாதிபதி அலுவலத்துக்கு சென்று மனு அளித்தனர். இதுபற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், ‘ஒரு வாரத்தில் ஜனாதிபதி எங்களை சந்தித்து பேச வேண்டும். இல்லாவிட்டால் எங்களை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளோம்‘ என கூறினார். 
Tags:    

Similar News