செய்திகள்

பீகார்-மேற்கு வங்கத்தில் வெள்ளப்பெருக்கு: வடகிழக்கு மாநிலங்களுக்கு ரெயில் சேவை 28-ம் தேதி வரை நிறுத்தம்

Published On 2017-08-19 10:29 GMT   |   Update On 2017-08-19 10:29 GMT
பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்டவாளங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் வடகிழக்கு மாநிலங்களுக்கான ரெயில் சேவை ஆகஸ்ட் 28-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கவுகாத்தி:

பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ரெயில்சேவை முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் ரெயில்வே துறைக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் தண்டவாளங்களை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.

சீரமைப்பு பணிகள் முடிவடையாததால், வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்கள் மற்றும் கிழக்கு பகுதியில் ஒருசில பகுதிகளுக்கு வரும் 28-ம் தேதி வரை ரெயில்கள் இயக்கப்படமாட்டாது என வடகிழக்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

எனினும் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் அல்லது அங்கிருந்து வர விரும்பு பயணிகளின் சிரமத்தை போக்குவதற்காக, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வியாபாரிகள் கிஷன்கஞ்ச் ரெயில் நிலையத்தில் சரக்குகளை ஏற்றி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக தல்கோலா-கவுகாத்தி, கவுகாத்தி-திப்ருகர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. கூடுதலாக, தல்கோலா-திப்ருகர் இடையே நேரடி ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News