செய்திகள்

மந்திரிகள் ஊழல் விவகாரம்: சித்தராமையாவை சிறையில் அடைப்பேன் - எடியூரப்பா சபதம்

Published On 2017-08-18 13:39 GMT   |   Update On 2017-08-18 13:40 GMT
‘மந்திரிகள் ஊழல் விவகாரம் தொடர்பாக, சித்தராமையாவை சிறையில் அடைப்பேன்’ என பா.ஜ.க. மாநில தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா சபதம் செய்தார்.
பெங்களூர்:

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரியும், மாநில பா.ஜ.க. தலைவருமான எடியூரப்பா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

ஊழல் வழக்குகளில் சிக்கி வரும் மந்திரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், முதல்-மந்திரி சித்தராமையா அரசு அவர்களை காபந்து செய்து வருகிறது. ஆனால், நாங்கள் இதை விடப்போவதில்லை. ஊழலில் ஈடுபட்டவர்கள் குறித்து
முழு விவரங்களை சேகரித்து வருகிறோம். விரைவில், ஊழலில் ஈடுபட்டவர்களையும், அவர்களை பாதுகாத்து வரும்
சித்தராமையாவையும் சிறையில் தள்ளுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஊழல் புகாரில் சிக்கிய மந்திரிகள் மீது நடவடிக்கை எடுக்காத மாநில அரசை கண்டித்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் விதான் சவுதாவை நோக்கி போராட்டம் நடத்த சென்றார் எடியூரப்பா. அப்போது அவரையும்,
பா.ஜ.க. தலைவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
 


இந்நிலையில், தன்மீது போடப்பட்டுள்ள எப்.ஐ.ஆர். குறித்து எடியூரப்பா கூறுகையில், “இன்னும் 100 எப்.ஐ.ஆர். போட்டாலும், இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் நான் அஞ்சமாட்டேன். உங்களை பதவியில் இருந்து கீழே இறக்கும் வரையில் எங்களது போராட்டத்தை நிறுத்த மாட்டோம்'' என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, சமீபத்தில் பெங்களூர் சென்ற பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா பேசுகையில், ‘இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த ஆட்சி என்றால் அது கர்நாடக மாநில ஆட்சிதான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்த மந்திரிகள் மீதும்
சித்தராமையா மீதும் நடவடிக்கை எடுப்போம்’ என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வரா கூறுகையில், “பா.ஜ.க.வினர் புகார் கூறிவரும் மந்திரிகள் ஊழலில் ஈடுபட்டதற்கான உரிய ஆதாரங்களை அளிக்க வேண்டும். அதற்கு மாநில அரசு உரிய பதிலை அளிக்கும். அதைவிடுத்து, அரசியல் ஆதாயத்துக்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது தேசிய கட்சிக்கு அழகல்ல’’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News