செய்திகள்

சி.பி.ஐ. முன் 23-ந்தேதி கார்த்தி சிதம்பரம் ஆஜராக வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2017-08-18 08:05 GMT   |   Update On 2017-08-18 08:05 GMT
கார்த்தி சிதம்பரம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுடெல்லி:

மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீட்டுக்கான அனுமதி வழங்கிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றார் என்று சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதில் சி.பி.ஐ. விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறி அவரை தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றார். கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லவும் ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.


இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசுக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்து விட்டது. கார்த்தி சிதம்பரம் வருகிற 23-ந்தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக போதிய ஆதாரம் இருந்தால் கைது செய்யலாம் என்றும் கோர்ட்டு அனுமதி வழங்கியது.

முன்னதாக கார்த்தி சிதம்பரம் சார்பில் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக அனுமதி கோரப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது. டெல்லி சென்று ஆஜராக ஏன் தயக்கம் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
Tags:    

Similar News