செய்திகள்

பீகாரில் மழை வெள்ளத்தில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு படகில் பிரசவம் பார்த்த தேசிய பேரிடர் மேலாண்மை படை

Published On 2017-08-17 00:38 GMT   |   Update On 2017-08-17 00:38 GMT
பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கிய கர்பிணியை மீட்ட தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் அப்பெண்ணுக்கு படகிலேயே பிரசவம் பார்த்துள்ளனர்.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கிய கர்பிணியை மீட்ட தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் அப்பெண்ணுக்கு படகிலேயே பிரசவம் பார்த்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பல மாவட்டங்கள் வெள்ளத்தில் பாதித்து உள்ளன. ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அங்கு வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு மதுபானி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த ஒரு கிராமத்தில் இருந்து மக்கள் படகின் மூலம் நேற்று மீட்கப்பட்டனர். அப்படி மீட்கப்பட்டவர்களில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

தேசிய பேரிடர் மேலாண்மை படையினரின் மீட்பு படகுகளில் எப்போதுமே அவசர தேவைக்கு மருத்துவ பணியாளர்கள், நர்சுகள் இருப்பார்கள். எனவே அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அவர்கள் படகிலேயே மறைவாக பிரசவம் பார்த்தனர். அந்தப் பெண்ணுக்கு அழகான குழந்தை பிறந்தது. இந்த தகவலை தேசிய பேரிடர் மேலாண்மை படையின் 9-வது பிரிவின் பொறுப்பாளர் விஜய் சின்கா தெரிவித்தார். கடந்த ஆண்டும் இதுபோன்று பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டபோது 4 பெண்கள் பிரசவித்தது நினைவுகூரத்தக்கது.

Tags:    

Similar News