செய்திகள்

ஆந்திராவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு

Published On 2017-08-16 05:19 GMT   |   Update On 2017-08-16 05:20 GMT
ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை 13 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

நகரி:

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் உம்மிடிவரம் பகுதியை சேர்ந்தவர் மல்லிகார்ஜுனா. இவரது மனைவி அனுஷா. இவர்களது 2 வயது குழந்தை சந்திரசேகர்.

நேற்று மதியம் அனுஷா தனது குழந்தை சந்திரசேகரை அழைத்துக்கொண்டு மாடு மேய்க்க சென்றார். வயலில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்க, குழந்தை சந்திரசேகர் அங்கு விளையாடிக் கொண்டிருந்தது.

திடீரென்று ஒரு மாடு காணாமல் போனதால் அதை தேடி அனுஷா சென்றார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பகல் 1.30 மணியளவில் திடீரென்று 200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்தது.

இதற்கிடையே மாட்டை கண்டு பிடித்து திரும்பிய அனுஷா குழந்தை காணாமல் போனதை பார்த்து திடுக்கிட்டார். அங்கும் இங்கும் தேடிப் பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. இது பற்றி கணவருக்கு தகவல் தெரிவித்தார். அவரும், உறவினர்களும் வந்து தேடிப் பார்த்தனர்.

அப்போது ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையின் முனங்கல் சத்தம் கேட்டது. ஆழ்துளை கிணற்றில் குழந்தை இருப்பதை தெரிந்து கொண்டனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.


குழந்தையை உடனடியாக மீட்க முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

சம்பவ இடத்துக்கு கலெக்டர் கிருத்திகா சுக்லா, போலீஸ் சூப்பிரண்டு வெங்கடப்ப நாயுடு மற்றும் போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

உடனடியாக பொக்லைன் எந்திரம் கொண்டுவரப்பட்டது. அப்போது குழந்தை சந்திரசேகர் 13 அடியில் சிக்கிக்கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அருகில் 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. சிறுவன் சுவாசிக்க வசதியாக கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

அப்போது நேரம் இருட்டி விட்டதால் விளக்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. தீயணைப்பு படையினர் தீவிரமாக போராடி இரவு 2.30 மணியளவில் குழந்தையை உயிருடன் மீட்டனர். சுமார் 13 மணி நேர போராட்டத்துக்கு பிறகு குழந்தை மீட்கப்பட்டது.

உடனே குழந்தையை ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு உடனடியாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தை சந்திரசேகர் தற்போது நலமாக உள்ளது.

Tags:    

Similar News