செய்திகள்

மத்திய மந்திரிசபையில் ஐக்கிய ஜனதா தளம் சேருகிறது: நிதிஷ்குமார் தகவல்

Published On 2017-08-12 06:14 GMT   |   Update On 2017-08-12 06:14 GMT
மத்திய மந்திரிசபையில் ஐக்கிய ஜனதா தளம் சேருகிறது என முதல்-மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பா.ஜனதாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார்.

அதன் பிறகு நேற்று டெல்லி சென்ற நிதிஷ்குமார் பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மரியாதை நிமித்தமாக நான் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினேன். இம்மாத இறுதியில் மீண்டும் டெல்லி வர இருக்கிறேன். அப்போது பீகார் மாநில வளர்ச்சிப் பணிகள் குறித்து பேச இருக்கிறேன்.

எங்கள் கட்சியின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு எடுத்தாகி விட்டது. இதுநான் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவு அல்ல. கட்சியில் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுதான். இதில் யாருக் காவது மாற்றுக் கருத்து இருக்கும் என்றால் அவர்கள் தங்கள் விருப்பப்படி முடிவு எடுக்கலாம்.

இவ்வாறு கூறிய அவரிடம் மத்திய மந்திரிசபையில் ஐக்கிய ஜனதா தளம் இணைய வாய்ப்பு உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு நிதிஷ்குமார் கூறியதாவது:-

பீகாரில் பா.ஜனதாவும் ஐக்கிய ஜனதா தளமும் மந்திரி சபையில் இடம் பெற்றுள்ளது. எனவே மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவது என்பது இயல்பான வி‌ஷயம்தான் என்றார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு இப்போது பாராளுமன்ற மக்களவையில் 2 எம்.பி.க்களும், மேல்-சபையில் 10 எம்.பி.க்களும் உள்ளனர். மேல்-சபையில் கட்சியின் தலைவராக உள்ள சரத்யாதவ், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்ததால் அதிருப்தியில் உள்ளார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் வருகிற 19-ந்தேதி பாட்னாவில் நடக்கிறது. அப்போது பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இணைவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News