செய்திகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்: 27-ம் தேதி பதவியேற்கிறார்

Published On 2017-08-08 14:59 GMT   |   Update On 2017-08-08 14:59 GMT
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார். இதையடுத்து அவர் 27-ம்தேதி பதவி ஏற்க உள்ளார்.
புதுடெல்லி:

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், இம்மாதம் 27-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால், அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் பணிகள் தொடங்கின. தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான தீபக் மிஸ்ரா பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு ஜே.எஸ்.கேஹர் கடந்த மாதம் பரிந்துரை செய்திருந்தார். சட்ட அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி தீபக் மிஸ்ராவை நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து தீபஸ் மிஸ்ரா நியமனம் தொடர்பாக சட்ட அமைச்சகம் அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தின் 45-வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா வரும் 27-ம் தேதி பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

1977-ம் ஆண்டு வக்கீல் பணியை தொடங்கிய தீபக் மிஸ்ரா, 1996-ம் ஆண்டு, ஒடிசா ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மத்தியப் பிரதேசம், பாட்னா, டெல்லி ஐகோர்ட்டுகளில் பணியாற்றிய பிறகு, 2011-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆனார். தலைமை நீதிபதி பதவியில் இருந்து அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி அவர் ஓய்வு பெறுவார்.  
Tags:    

Similar News