செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடுக்கு கட்சி மாறி 21 எம்.பி.க்கள் ஓட்டு போட்டனர்

Published On 2017-08-06 09:16 GMT   |   Update On 2017-08-06 09:16 GMT
ஜனாதிபதி தேர்தலைப் போல், துணை ஜனாதிபதி தேர்தலிலும் 21 எம்.பி.க்கள் வரை கட்சி மாறி வெங்கையா நாயுடுக்கு வாக்களித்து உள்ளனர்.
புதுடெல்லி:

துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று நடந்தது. பாராளுமன்றத்தின் இரு அவை எம்.பி.க்களும் வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் உள்ள 785 எம்.பி.க்களில் 771 பேர் வாக்குப்பதிவு செய்து இருந்தனர். 14 எம்.பி.க்கள் ஓட்டுப்போட வரவில்லை.

11 எம்.பி.க்கள் போட்ட ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. ஓட்டு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் வெங்கையா நாயுடு முன்னணியில் இருந்தார். முடிவில் அவர் 516 எம்.பி.க்களின் ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்திக்கு 244 ஓட்டுகள் கிடைத்தது.

ஜனாதிபதி தேர்தலைப் போல் துணை ஜனாதிபதி தேர்தலிலும் பல எம்.பி.க்கள் கட்சி மாறி வெங்கையா நாயுடுக்கு வாக்களித்து இருப்பது தெரியவந்துள்ளது.

அவருக்கு பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி, ஆதரவு கட்சி எம்.பி.க் களின் மொத்த வாக்கான 495 கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் 516 எம்.பி.க்கள் வாக்களித்து இருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது. 21 எம்.பி.க்கள் வரை கட்சி மாறி வாக்களித்துள்ளனர்.

மொத்த வாக்குகளில் 68 சதவீதம் வெங்கையா நாயுடுக்கு கிடைத்துள்ளது. கோபாலகிருஷ்ண காந்தி 32 சதவீதம் வாக்குகளே பெற்றுள்ளார்.

இதற்கு முன் 2007 மற்றும் 2012-ம் ஆண்டு நடந்த துணை ஜனாதிபதி தேர்தல்களில் அமித் அன்சாரி 233 மற்றும் 252 எம்.பி.க்கள் ஆதரவு மட்டுமே பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கையா நாயுடு வருகிற வெள்ளிக்கிழமை துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.
Tags:    

Similar News