செய்திகள்

மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 85 சதவீத தண்ணீர் உள்ளது: மாநகராட்சி தகவல்

Published On 2017-07-30 03:54 GMT   |   Update On 2017-07-30 03:54 GMT
மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 85.53 சதவீத தண்ணீர் உள்ளதாக மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
மும்பை:

மராட்டியத்தில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. இதையடுத்து கடந்த 2 மாதங்களாக மும்பையின் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அமைந்துள்ள பகுதியிலும் நல்ல மழை பெய்தது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் கடந்த 2 ஆண்டுகளை காட்டிலும் வேகமாக நிரம்பியது. இதில் கடந்த 15-ந் தேதி மோதக் சாகர் ஏரியும், 18-ந் தேதி தான்சா ஏரியும் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதேபோல விகார், துல்சி ஏரிகளும் எப்போது வேண்டுமானாலும் நிரம்பும் நிலையில் உள்ளன.

இந்தநிலையில் நேற்று மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மும்பையில் குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 14 லட்சத்து 47 ஆயிரத்து 363 மில்லியன் லட்சம் லிட்டர் ஆகும். தற்போது ஏரிகளில் 12 லட்சத்து 37 ஆயிரத்து 999 மில்லியன் லட்சம் லிட்டர் தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவு நீரில் 85.53 சதவீதம் ஆகும்.

இதே நாளில் கடந்த ஆண்டு 9 லட்சத்து 13 ஆயிரத்து 326 மில்லியன் லட்சம் தண்ணீர் மட்டுமே ஏரிகளில் இருந்தது. 2015-ம் ஆண்டு 7 லட்சத்து 41 ஆயிரத்து 350 மில்லியன் லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

நேற்று மும்பையின் பல பகுதிகளில் லேசான மழை பெய்தது. இன்னும் ஒரு மாதத்திற்கு மழை காலம் இருக்கும் என்பதால் இந்த ஆண்டு மும்பைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News