செய்திகள்

சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளித்ததை நேரில் பார்த்தேன்: ரூபா மீண்டும் குற்றச்சாட்டு

Published On 2017-07-27 17:04 GMT   |   Update On 2017-07-27 17:04 GMT
ஜெயிலில் சசிகலா சிறப்பு சலுகைகள் அனுபவித்தார் என்றும் அதனை நான் நேரிலேயே பார்த்தேன் என்றும் டி.ஐ.ஜி. ரூபா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
பெங்களூரு:

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று அளித்த பேட்டியின்போது சிறையில் சசிகலாவுக்கு எந்த சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவில்லை என கூறினார். இதனால் சசிகலா விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜெயிலில் சசிகலா சிறப்பு சலுகைகள் அனுபவித்தார் என்றும் அதனை நான் நேரிலேயே பார்த்தேன் என்றும் டி.ஐ.ஜி. ரூபா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

எனது கடமையை மட்டுமே இதுநாள் வரையும் செய்து வருகிறேன். இதற்காக, கடந்த 17 ஆண்டுகளில், 26 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளேன். எனினும், அதுபற்றி நான் கவலைப்படவில்லை.

எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் எனக்கு ஒன்றுதான். சமீபத்தில், சசிகலா பற்றி நான் அளித்த புகார் கூட அப்படிப்பட்ட ஒன்றுதான். உரிய ஆதாரங்களுடன் நான் இந்த புகாரை அளித்துள்ளேன். வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன்.

சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. எல்.இ.டி. டி.வி, என அனைத்தும் படுக்கை வசதி செய்யப்பட்டிருந்தது. அவருக்கு சிறையில் முதல் வகுப்பு கூட தரவில்லை. சாதாரண தண்டனை கைதி அந்தஸ்தில் உள்ள அவருக்கு, முதல் வகுப்பில் கூட வராத சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

சசிகலாவை நான் சந்தித்தபோது நீங்கள் கன்னடம் கற்று வருவதாக கேள்விப்பட்டேன். அது உண்மையா என்று கேட்டேன். அதற்கு சசிகலா கன்னடம் கொஞ்சம் தான் தெரியும் என்றார். எனது கேள்விகளை முழுமையாக அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. பதில் அளிக்க அவர் திணறினார்.

உங்கள் அறையில் சாமி படங்கள் மற்றும் சிலைகள் வைத்து பூஜை செய்ததை காட்டுங்கள் என்றேன். சசிகலாவும் அவற்றை எனக்கு காட்டினார். மற்றபடி, அவரிடம் பேச எனக்கு அவகாசம் கிடைக்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் எப்படிப்பட்டவர் என்றும் தெரியாது.

சசிகலா போல, நிறைய பேர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எளிதாக புழங்குகின்றன.

சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்த முழு விவரங்களையும் எனது புகார் அறிக்கையில் தெரிவித்துள்ளேன். அதற்கான ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. சிறைத்துறை அதிகாரியான நான் எனது கடமையை செய்துள்ளேன். என் மீது மானநஷ்ட வழக்கு தொடர முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News