செய்திகள்

ஆதார் எண்ணை பதிவு செய்யாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது: கேரள அரசு அறிவிப்பு

Published On 2017-07-26 05:08 GMT   |   Update On 2017-07-26 05:08 GMT
கேரள அரசு ஊழியர்கள் வருகிற 31-ந்தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யாவிட்டால் அவர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் வழங்கப்படமாட்டாது என்று கேரள அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம்:

மத்திய அரசு தனது பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் பதிவை கட்டாயம் ஆக்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து தற்போது இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கேரள அரசு ஊழியர்கள் வருகிற 31-ந்தேதிக்குள் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்யாவிட்டால் அவர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் வழங்கப்படமாட்டாது என்று கேரள அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கேரள அரசு தலைமைச் செயலாளர் நளினி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவுபற்றிய சுற்றறிக்கை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த உத்தரவில் அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது ஆதார், ரே‌ஷன் கார்டு, பான்கார்டு போன்றவற்றின் நகல்களை தாங்கள் பணிபுரியும் அரசு அலுவலகங்களில் வருகிற 31-ந்தேதிக்குள் கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.


மேலும் கேரளாவில் 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மாதம் ரூ.1500 மற்றும் அதற்கு மேல் மின்கட்டணம் செலுத்துபவர்களுக்கு ரே‌ஷன் சலுகைகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட உள்ளது. இவர்கள் ரே‌ஷன் கடைகளில் அரிசி மட்டும் பெற்றுக் கொள்ளலாம். மற்ற மானிய பொருட்கள் எதுவும் வழங்கப்படமாட்டாது. விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்தபிறகு முதல்-மந்திரி பினராய் விஜயன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News