செய்திகள்

சசிகலாவுக்காக சிறையில் போயஸ் கார்டன் உருவானது: அதிகாரி ரூபாவின் 2-வது அறிக்கையில் தகவல்

Published On 2017-07-16 10:42 GMT   |   Update On 2017-07-16 10:42 GMT
சசிகலாவிற்கு சிறையில் சலுகை வழங்கியது தொடர்பாக கர்நாடக உள்துறை செயலாளர், காவல் துறை இயக்குனர் ஆர்.கே. தத்தா, சிறைத் துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ஆகியோருக்கு 2-வது அறிக்கையை அனுப்பியுள்ளார் டி.ஐ.ஜி. ரூபா..


டி.ஐ.ஜி. ரூபா கர்நாடக உள்துறை செயலாளர், காவல் துறை இயக்குனர் ஆர்.கே. தத்தா, சிறைத் துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ஆகியோருக்கு 2-வது அறிக்கை அனுப்பினார்.

நான் ஜெயிலில் உள்ள கைதிகளின் குறைகளை கேட்பதற்காக கடந்த 10-ந் தேதி ஜெயிலுக்கு சென்றேன். இதுதொடர்பாக சிறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளேன். கைதிகளை சந்தித்துபேசியதில் பல குறைகளை தெரிவித்தனர். சில கைதிகள் போலீஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கஞ்சா உள்பட போதை பொட்கள், பீடி, சிகரெட், மதுபானங்கள் பயன்படுத்துவதாகவும், சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

ஜெயிலில் பல வி‌ஷயங்கள் ஆதாரமின்றி அழிக்கப்பட்டுள்ளன. சசிகலா, தெல்கி தொடர்பான வீடியோ புகைப்பட ஆதாரங்களை ஜெயில் அதிகாரிகள் அழித்துவிட்டனர். சசிகலா இருக்கும் இடத்தை சி.சி. டி.வி. கண்காணிப்பில் இருந்து விலக்கி வைத்துள்ளனர்.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலாவுக்கு வி.வி.ஐ.பி. வசதி, சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஜெயிலில் சசிகலாவை பார்க்க வருபவர்களுக்கு சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் அறை அருகில் தனி இடம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் சசிகலா அமர தனி இருக்கையும், பார்வையாளர்கள் அமர 4 நாற்காலிகள் மற்றும் ஒரு மேஜை போடப்பட்டுள்ளது. அவருக்காக தனி போயஸ் அலுவலகமே இயங்கி இருக்கிறது.

சசிகலாவுக்கு ஒரு நாளும் சிறை உணவு வழங்கப்படவில்லை. அவர் விரும்பிய உணவுகள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சசிகலாவுக்கு வெளியில் இருந்து பழம், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகளே வாங்கி வந்து தருகின்றனர். செல்போனில் தொடர்பு கொண்டு பேச எந்த தடையும் விதிக்கவில்லை.

கடந்த 6 மாதங்களில் சசிகலாவை எந்தெந்த நாளில் யார்-யாரெல்லாம் ஜெயிலில் சந்தித்து பேசினார்கள் என்பது தொடர்பான விவரங்கள் கொண்ட ஆவணங்கள் அழிக்கப்பட்டு உள்ளன.

சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை, சிறப்பு வரவேற்பு அறை, பெரிய அளவிலான டி.வி. வழங்கப்பட்டுள்ளது. சசிகலாவின் அறை முழுவதும் விலை உயர்ந்த தரை விரிப்பு, ஜன்னல் ஸ்கிரீன், பெரிய மெத்தை, ஏ.சி. வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஜெயிலில் பல சி.சி.டி.வி. கேமிராக்கள் இயங்கவில்லை.


நான் ஜெயிலில் சோதனை நடத்தியது பதிவாகாது என்பதால் என் கையில் வைத்திருந்த கேன்டி கேமிராவில் படம் பிடித்தேன். அதை எனது பொறுப்பில் உள்ள போலீஸ் அதிகாரியிடம் கொடுத்து பென்டிரைவில் பதிவு செய்யும்படி கூறினேன். ஆனால் அவர் கேன்டி கேமிராவில் படம் பிடித்த காட்சிகளை அழித்து உள்ளார்.

இதன்மூலம் ஜெயிலில் பெரிய அளவில் முறைகேடு சம்பவங்கள் மூத்த அதிகாரிகளின் ஆலோசனையின்பேரில் நடக்கிறது என்பது உறுதி ஆகிவிட்டது.

ஜெயிலில் முக்கியமாக எந்தெந்த இடங்களில் சி.சி.டி.வி. கேமிரா கண்டிப்பாக 24 மணி நேரமும் இயங்க வேண்டுமோ அவை அனைத்தும் பழுதடைந்து உள்ளன. பல முக்கிய ஆதாரங்களை திட்டமிட்டு அழித்து உள்ளனர்.

இவ்வாறு ரூபா குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News