செய்திகள்

மது விலக்கு அமலுக்கு பிறகு முதல் நடவடிக்கை: பீகாரில் மது குடித்த 2 பேருக்கு 5 ஆண்டு ஜெயில்

Published On 2017-07-12 10:39 GMT   |   Update On 2017-07-12 10:39 GMT
மது விலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு பீகாரில் கோர்ட்டு மூலம் முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மது பானம் குடித்த 2 பேருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பீகாரில் பூரண மது விலக்கை நிதீஷ்குமார் கொண்டுவந்தார். இந்த சட்டத்தின்படி மது விற்பனை, பதுக்கி வைப்போர், குடிப்பவர் மீது 10 ஆண்டுவரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மது விலக்கு அமலுக்கு பிறகு சட்ட விரோதமாக கடத்தப்பட்ட லட்சக்கணக்கான லிட்டர் மதுவை போலீசார் கைப்பற்றி இருந்தனர். 45 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைதாகி இருந்தனர்.

கடந்த மாதம் மதுபான மாபிய கும்பலை பாதுகாத்ததாக 3 போலீசார் நீக்கப்பட்டனர். சிலர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். கடந்த வாரம் 4 போலீசார் கைதாகி இருந்தனர்.

இந்த நிலையில் மது விலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு பீகாரில் கோர்ட்டு மூலம் முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மது பானம் குடித்த 2 பேருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

பீகார் மாநிலம் ஜெகன்னாபுரத்தை சேர்ந்த தொழிலாளிகளான மஸ்தான் மாஞ்சி, பெய்ன்டர் மாற்சி சகோதரர்கள்களான இருவரும் குடிபோதையில் இருந்த போது கடந்த மே மாதம் 29-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.

இவர்களது ரத்த பரிசோதனையில் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மீதான வழக்கில் கோர்ட்டில் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மது குடித்த 2 பேருக்கும் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஜெகன்னா மாவட்ட நீதிபதி திரிலோகிநாத் தீர்ப்பளித்தார்.

அதோடு இருவருக்கும் தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. பீகாரில் மதுவிலக்கு அமலுக்கு பிறகு விதிக்கப்பட்ட முதல் தண்டனை இதுவாகும்.
Tags:    

Similar News