செய்திகள்

துணை ராணுவப் படையில் பெண்களுக்கு மேலும் அதிக இட ஒதுக்கீடு: உள்துறை அமைச்சகம்

Published On 2017-07-02 06:56 GMT   |   Update On 2017-07-02 06:56 GMT
துணை ராணுவப்படையில் அதிகளவிலான பெண்களை சேர்க்கும் விதமாக 33 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக கொண்டு வரப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. மற்ற அனைத்து துறைகளிலும் இந்த ஒதுக்கீட்டுக்கு ஏற்ப பெண்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். ஆனால், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய துறைகளில் மேற்கண்ட இடஒதுக்கீட்டுக்கு ஏற்ப பெண்கள் தேர்வு செய்யப்படுவது இல்லை.

ராணுவங்களில் அலுவலக மற்றும் மருத்துவ பணிகளில் பெண்கள் பணியாற்றினாலும், போர் உள்ளிட்ட நேரடி பணிகளுக்கு பெண்கள் குறைவான அளவிலேயே தேர்வு செய்யப்படுகின்றனர். மத்திய வெளியுறவு இணையமைச்சராக உள்ள வி.கே.சிங், முன்னர் ராணுவ தளபதியாக இருந்தபோது 33 சதவிகித இடஒதுக்கீடுக்கு தேவையான நடைமுறைகளை முன்னெடுத்துச் சென்றார். அவரது நடவடிக்கைக்கு அரசும் பச்சைக் கொடி காட்டியது. இதனால் தற்போது, இந்த நிலைமாறி போர் விமானங்களை கையாளும் அளவுக்கு பெண்கள் ராணுவத்தில் கை தேர்ந்து விட்டனர்.

இந்நிலையில், தற்போது துணை ராணுவப் படைகளான மத்திய தொழிலக பாதுகாப்பு படை, இந்தோ திபெத் பாதுகாப்பு படை, பாராளுமன்ற பாதுகாப்பு படை, எல்லைப்பாதுகாப்பு படை ஆகியவற்றில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 15 சதவிகிதத்தில் இருந்து 33 சதவிகிதமாக உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

9 லட்சம் வீரர்களை உள்ளடக்கிய மேற்கண்ட துணை ராணுவப் படைகளின் தற்போது 20,000 பெண்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அரசின் இந்த நடவடிக்கையின் மூலமாக பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News