செய்திகள்

திருப்பதியில் தரிசனத்திற்கு சென்றபோது தேவஸ்தான பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட பக்தர் உயிரிழப்பு

Published On 2017-06-26 07:36 GMT   |   Update On 2017-06-26 07:36 GMT
திருப்பதியில் தரிசனத்திற்கு சென்றபோது தேவஸ்தான பாதுகாவலர்கள் தாக்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பக்தர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமலை:

ஆந்திர மாநிலம், ஏலூரை சேர்ந்தவர் பத்மநாபம் (வயது 58). இவர் தனது பேத்தியின் அன்ன பிரசன்னம் நிகழ்ச்சிக்காக கடந்த மார்ச் 19-ந் தேதி குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய திருமலைக்கு வந்தார். அவர் சாமி தரிசனம் செய்வதற்காக மார்ச் 21-ந் தேதி இரவு 10.30 மணிக்கு இலவச தரிசனத்தில் வரிசையில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் மகாதுவாரம் அருகே சோதனை மையத்திற்கு வந்தனர்.

அங்கு பெண் பக்தர்கள் மற்றும் ஆண் பக்தர்களுக்கு என தனித்தனியாக இருக்கும் வரிசைகளை கவனிக்காத பத்மநாபம் பெண்கள் வரிசைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதைக்கண்ட தேவஸ்தான பெண் பாதுகாவலர் ஷியாமளா திடீரென பத்மநாபத்தை பிடித்து தள்ளிவிட்டார். இதனால் செய்வதறியாது திகைத்த பத்மநாபம் பெண் காவலரை தட்டிக்கேட்டார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைக்கண்ட சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் அங்கு வந்து பத்மநாபத்தை சரமாரியாக தாக்கினர்.

இதில், அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு பத்மநாபம் சிகிச்சை பலனின்றி இறந்தர்.

பத்மநாபத்தை தாக்கியதாக தேவஸ்தான பாதுகாவலர்களாக பணியாற்றிய புருசோத்தமன், ஷியாமளா, பூ‌ஷணம் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

ஆனால் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் பத்மநாபம் இறந்ததால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சம்பந்தப்பட்ட பாதுகாவலர்களை கைது செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி கோவில் பாதுகாவலர்கள் தாக்கி பக்தர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பத்பநாபத்தை தாக்கியதாக தேவஸ்தானத்தில் ஒப்பந்தமுறையில் பணிபுரிந்த 2 ஊழியர்களை தேடி வருகின்றனர். தற்போது அவர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். அவர்களை தேடி போலீசார் அங்கு சென்றுள்ளனர்.

Tags:    

Similar News