search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupati Devasthanam"

    • திருப்பதி உண்டியல் வருமானம் மலைக்க வைக்கும் அளவில் இருந்து வருகிறது.
    • 46.46 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல்லாயிக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர். பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையான தரிசித்து வருகின்றனர்.

    ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். திருப்பதி உண்டியல் வருமானம் மலைக்க வைக்கும் அளவில் இருந்து வருகிறது.

    கடந்த மாதம் 21 லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் சார்பில் ரூ.116.46 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். 1.03 கோடி லட்டு விற்பனையானது.

    7 லட்சத்து 5 ஆயிரம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 46.46 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டன.
    • திருப்பதியில் நேற்று 63, 519 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசியொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டன.

    இதேபோல் கடந்த 23-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு 4 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் 9 இடங்களில் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

    இலவச தரிசன டிக்கெட் பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 4 லட்சம் இலவச தரிசன டிக்கெட் இன்று அதிகாலையுடன் தீர்ந்தது.

    இதையடுத்து இலவச தரிசனம் டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டன. ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டும் திருப்பதி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    திருப்பதி மலைக்கு செல்லும் பக்தர்கள் பஸ்சில் ஏறும்போது தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டும் பஸ்சில் அனுமதிக்கப்படுகின்றனர்.

    மற்ற பக்தர்கள் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடப்படுகின்றனர். இதேபோல் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் பக்தர்கள் அலிபிரி சோதனை சாவடியில் டிக்கெட் உள்ளதா என பரிசோதித்து திருப்பதி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    மற்ற பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

    இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

    கோவிலில் நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    வருகிற ஜனவரி 1-ந் தேதி வரை தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்த தகவல் தெரியாமல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் தரிசன டிக்கெட் இல்லாமல் திரும்பி வருகின்றனர்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் வைகுண்ட வாசல் தரிசன டிக்கெட்டு களை பக்தர்களுக்கு தேவஸ்தானம் தினமும் விநியோகித்து இருக்க வேண்டும்.

    ஒட்டுமொத்தமாக விநியோகம் செய்ததால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அவதி அடையாமல் இருக்க தேவஸ்தான அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்என வலியுறுத்தினர்.

    திருப்பதியில் நேற்று 63, 519 பேர் தரிசனம் செய்தனர். 26,424 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.5 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • பா.ஜ.க, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
    • திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு மீது மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் பணத்தில் ஒரு சதவீதம் அல்லது ரூ.36 கோடியை திருப்பதி மாநகராட்சியின் வளர்ச்சி பணிக்கு ஒதுக்குவது என தேவஸ்தானம் முடிவு செய்தது.

    பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணத்தை மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்க பா.ஜ.க, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதனால் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு மீது மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிதி ஒதுக்கீடுக்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

    இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான ஆண்டு பட்ஜெட்டில் ஒரு சதவீதத்தை திருப்பதி மாநகராட்சி வளர்ச்சிப் பணிக்கு ஒதுக்க வேண்டாம் என நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு நிராகரித்துள்ளது.

    இது தொடர்பாக தலைமைச் செயலாளர் கரிகால் வளவன் திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    • திருப்பதி கோசாலையில் உயர் ரகத்தை சேர்ந்த 200 நாட்டு பசு உள்ளன.
    • வாடகைத்தாய் முறையில் சாகிவால் நாட்டு இனத்தைச் சேர்ந்த கன்றை ஈன்றுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையானுக்கு நடத்தப்படும் தூப தீப நெய்வேத்திய சமர்ப்பணங்களுக்கு நாட்டு பசுக்கள் மூலம் பெறப்பட்ட பால் தயிர் வெண்ணெய் ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

    இதற்கு 500 நாட்டுப் பசுக்கள் தேவையாக உள்ளது. தற்போது திருப்பதி கோசாலையில் உயர் ரகத்தை சேர்ந்த 200 நாட்டு பசு உள்ளன.

    மேலும் 300 உயர் ரக நாட்டுப் பசுக்களை நன்கொடையாக வழங்க பக்தர்கள் தயாராக உள்ளனர்.

    இந்நிலையில் பால் உற்பத்திக்காக தேவஸ்தான கோசாலையில் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

    அதிக பால் உற்பத்தி கொடுக்கும் உயர்ரக நாட்டு பசுக்களை வாடகைத்தாய் போன்ற முறையில் கலப்பினங்களாக உற்பத்தி செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானமும் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

    வட மாநிலங்களில் உள்ள உயர்ரக நாட்டு பசுக்களின் கருமுட்டைகளை சேகரித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழக ஆய்வகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு வேறு வகையான உயர் ரக நாட்டு காளைகளின் விந்தணு மூலம் அவை கருத்தரிக்க செய்யப்பட்டன.

    அந்த கருக்களை ஓங்கோல் போன்ற தென்னிந்திய உயரக நாட்டு பசுக்களின் கர்ப்பப்பையில் செலுத்தி கோசாலையில் வளர்த்து வருகின்றனர் .

    நாட்டிலேயே முதல்முறையாக திருப்பதி தேவஸ்தான கோசாலையில் வளர்க்கப்படும் பசு வாடகைத்தாய் முறையில் சாகிவால் நாட்டு இனத்தைச் சேர்ந்த கன்றை ஈன்றுள்ளது.

    இந்த கன்று குட்டிக்கு பத்மாவதி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    அடுத்த 5 ஆண்டுகளில் 324 உயர் ரக சாகிவால் கன்றுகளை கோசாலையில் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • 62 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் வழங்கியது.
    • ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    திருப்பதிக்கு தொலைதூரத்தில் இருந்து வர முடியாத பக்தர்களுக்காக நாட்டின் முக்கிய நகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டும் பணியில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது.

    இதுவரை ஆந்திராவுக்கு வெளியே சென்னை, டெல்லி, ஐதராபாத், புவனேஸ்வர் கன்னியாகுமரி, ஜம்மு ஆகிய நகரங்களில் 6 கோவில்களை தேவஸ்தான நிர்வாகம் கட்டியுள்ளது.

    ஜம்மு பகுதி மஜின் கிராமத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டது.

    இதற்கு தேவையான 62 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் வழங்கியது.

    இங்கு ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்தார். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 9.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று மாலை இந்த கோவிலில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் 7-வது ஏழுமலையான் கோவில் கட்ட நேற்று காலை பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நவிமும்பையில் கோவில் கட்டுவதற்காக ரூ.500 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக மகாராஷ்டிரா அரசு வழங்கியுள்ளது. 

    • தேவஸ்தானம் சார்பில், 10 இலவச பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது.
    • பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி மலையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், இலவச பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி மலையில் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக, தேவஸ்தானம் சார்பில், 10 இலவச பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி, திருப்பதி மலையில் இயங்கி கொண்டிருக்கும் பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு பேருந்தில் தேவஸ்தான போக்குவரத்து அதிகாரிகள் நேற்று பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.

    • மாநில அரசு தேவஸ்தானத்தை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டுவது வருந்தத்தக்கது.
    • உண்மைகளை சரிபார்க்காமல் பொய்யை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி:

    திருப்பதியில் வாடகை அறை முன்பதிவிற்காக பெறப்படும் முன்பணத் தொகையை மாநில அரசு பயன்படுத்துவதாகவும், அதனால்தான் பக்தர்கள் கணக்கில் தாமதமாகச் சென்றடைவதாகவும் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர் என்றும், இதுபோன்ற பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் அவதூறு பிரசாரம் செய்ததாக தெலுங்கு தேச எம்.எல்.சி. பி.டெக் ரவி மீது திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் திருமலை 2-வது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    திருமலைக்கு வரும் பக்தர்கள் கரண்ட் புக்கிங் மற்றும் ஆன்லைன் புக்கிங் முறையில் வாடகை அறைகளை முன்பதிவு செய்து வருகின்றனர். தரிசனம் முடித்து அறைகளைக் காலி செய்த பிறகு, அவற்றுக்கான முன்வைப்புத் தொகையை திரும்பப் பெறுவதற்கான தகுதி அறிக்கையானது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளான ஃபெடரல் வங்கி அல்லது எச்டிஎப்சி வங்கிக்கு அன்று மாலை 3 மணிக்குள் அனுப்பப்படும்.

    இந்த வங்கிகளின் அதிகாரிகள் அதே நாளில் (வங்கி வேலை நாள்களில்) நள்ளிரவு 12 மணிக்குள் சம்பந்தப்பட்ட வணிக சேவைகளுக்கு அனுப்புவார்கள். வணிக சேவைகள் அடுத்த நாள் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும். வாடிக்கையாளரின் வங்கி தொடர்புடைய தொகையை உறுதிப்படுத்தும் செய்தியையும் (ஏஆர் எண்) பணத்தையும் அந்தந்த பக்தரின் கணக்குக்கு அனுப்புகிறது.

    வங்கியின் மூலம் வாடிக்கையாளரின் கணக்கில் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதை தேவஸ்தானம் கவனித்துள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, 7 வங்கி வேலை நாள்களுக்குள் பாதுகாப்பு வைப்புத் தொகையைத் திரும்பப் பெற வேண்டும். இந்த ஆண்டு, ஜூலை 11 முதல், தேவஸ்தான யுசிஐ முறையில் பணம் திரும்பப் பெறப்படுகிறது.

    இதனால் பணம் 4, 5 நாள்களில் திரும்பப் பெறப்படும். இதன் படி, பக்தர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில், பாதுகாப்பு வைப்புத்தொகை குறித்தும் தேவஸ்தானம் குறித்தும் சிலர் அவதூறு பிரசாரம் செய்வது நல்லதல்ல. உண்மையில், ரொக்க டெபாசிட் தொகை நேரடியாக பக்தர்களின் கணக்கில் செல்கிறது.

    மாநில அரசு தேவஸ்தானத்தை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டுவது வருந்தத்தக்கது. உண்மைகளை சரிபார்க்காமல் பொய்யை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.30 லட்சம் காணிக்கை செலுத்தி பக்தர்களுக்கு 3 வேளை உணவளிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. #TirupatiDevasthanam
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தினமும் 3 வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. அந்த திட்டத்துக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் காணிக்கைகளை வாரி வழங்கி வருகின்றனர்.

    சாதாரண நாட்களில் 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் பக்தர்களுக்கும், விழா நாட்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறது. அன்னதானத்துக்கு தினமும் 14-ல் இருந்து 16½ டன் அரிசி, 6½-ல் இருந்து 7½ டன் காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு முன்பு ஒருநாளைக்கு அன்னதானத்துக்கு ரூ.26 லட்சம் செலவாகியது. தற்போது விலைவாசி உயர்வால் ஒருநாளைக்கு ரூ.30 லட்சம் செலவாகிறது என தேவஸ்தான கணக்குத்துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.



    எனவே திருமலையில் பக்தர்களுக்கு ஒருநாளைக்கு இலவசமாக அன்னதானம் செய்ய ரூ.26 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவோர் ரூ.30 லட்சத்தை காணிக்கையாக செலுத்த வேண்டும். அவர்களின் பெயரில் பக்தர்களுக்கு 3 வேளை இலவசமாக உணவு வழங்கப்படும். ஒருநாளைக்கு செலவாகும் தொகையை செலுத்த முடியாதவர்கள் 3 வேளையில் ஏதேனும் ஒரு வேளை உணவை மட்டும் பக்தர்களுக்கு அளிக்கலாம்.

    அதில் காலை ஒரு வேளை மட்டும் உணவளிக்க ரூ.7 லட்சத்தை காணிக்கையாக செலுத்தலாம். மதியம் ஒரு வேளை மட்டும் உணவளிக்க ரூ.11½ லட்சத்தை காணிக்கையாக செலுத்த வேண்டும். இரவு ஒரு வேளை மட்டும் உணவளிக்க ரூ.11½ லட்சத்தை காணிக்கையாக செலுத்தலாம். ஒருநாளைக்கு பக்தர்களுக்கு உணவளிக்க ரூ.30 லட்சத்தை காணிக்கையாக செலுத்தும் திட்டம் இந்த மாதம் (மே) 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.

    ஸ்ரீவெங்கடேஸ்வரா நித்ய அன்னதானத்திட்ட அறக்கட்டளைக்கு இதுவரை 4 லட்சத்து 76 ஆயிரம் பேர் காணிக்கை வழங்கி உள்ளனர். அதன் மூலம் இதுவரை ரூ.1,071 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. அந்த காணிக்கை தொகை, அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதில் கிடைக்கும் வட்டி தொகையில் இருந்து தான் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #TirupatiDevasthanam
    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அடுத்த மார்ச் மாதத்துக்குள் 500 பேருக்கு இலவச அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. #Tirupati #TirupatiTemple
    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அடுத்த மார்ச் மாதத்துக்குள் 500 பேருக்கு இலவச அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இது தொடர்பாக தேவஸ்தானத்தின் செயல் இணை அதிகாரி போலா பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேவஸ்தானம் சார்பில் திருப்பதியில் உள்ள ஸ்வேதா பவனில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இலவச அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இதில் இந்தி தர்மம், கோவில், அர்ச்சகர் பணி உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு மாத காலம் நடைபெறும் இந்தப் பயிற்சியை 15 நாட்கள், 10 நாட்கள், 5 நாட்கள் என்று பிரித்து தேவஸ்தானம் அளித்து வருகிறது. அதன்படி அர்ச்சகர் பயிற்சியை முடித்த 32 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அதிகாரிகள் கலந்துகொண்டு, பயிற்சி பெற்ற 32 பேருக்கும் சான்றிதழ்களையும், அர்ச்சகர்களுக்கான பூஜை பொருட்களையும் வழங்கினர்.

    அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 500 பேருக்கு இலவச அர்ச்சகர் பயிற்சியை அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    இப்பயிற்சியைப் பெறுவதற்கு வரும் இளைஞர்களுக்கு உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளை தேவஸ்தானம் இலவசமாக அளித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tirupati #TirupatiTemple
    திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கும் மடப்பள்ளி முழுவதையும் கோவிலுக்கு வெளியில் அமைக்க தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது. #Tirupati #Laddu
    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானுக்கு நைவேத்தியமாக சமர்ப்பிக்கப்படும் பிரசாதங்கள் அனைத்தும் கோவிலுக்குள் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும் என்பது ஆகம விதியாகும்.

    ஆனால் நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரிப்பதன் காரணமாக கோவிலுக்குள் கூட்ட நெரிசல் ஏற்படுவதால், பிரசாதம் தயாரிப்பதற்கு தேவையான இடத்தை ஒதுக்க தேவஸ்தானத்தால் இயலவில்லை.

    அதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லட்டுக்கான பூந்தியை மட்டும் கோவிலுக்கு வெளியே தயாரிக்க முடிவு செய்து, அதற்கான பிரிவை வெளியில் அமைத்தது.

    அதைத் தொடர்ந்து கோவிலுக்கு வெளியில் தற்போது பூந்தி தயாரிக்கப்படுகிறது.

    அதை எவர்சில்வர் பெட்டிகளில் அடைத்து கோவிலுக்குள் அனுப்பி மடப்பள்ளியில் வைத்து, சர்க்கரைப்பாகு கலந்து, உருண்டையாக லட்டு பிடித்து அதே பெட்டிகளில் வெளியில் அனுப்பி பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    பக்தர்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு லட்டு இருப்பதை தேவஸ்தானம் கண்காணித்து வருகிறது. இந்நிலையில் லட்டு தயாரிப்பு தொடர்பாக புதிய நடைமுறையை உருவாக்குவது குறித்து தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

    அதாவது, கடந்த மாதம் நடைபெற்ற அறங்காவலர் குழுக்கூட்டத்தில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மடப்பள்ளியை அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

    அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி புதிய மடப்பள்ளியில் பூந்தி தயாரிப்பதற்கு கடலை மாவைக் கலப்பது, பூந்தி பொரிப்பது, சர்க்கரைப் பாகு செய்து, அதில் பூந்திகளைக் கலந்து தேய்ப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

    லட்டுகளை உருண்டையாகப் பிடிப்பதற்கு மட்டும் கோவிலுக்குள் அனுப்புவது பற்றி தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

    அவ்வாறு செய்வதால் கோவிலுக்குள் ஏற்பட்டிருக்கும் இடப்பற்றாக்குறையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.

    இதுதொடர்பாக ஆகம பண்டிதர்களுடன் தேவஸ்தான அதிகாரிகள் கலந்துரையாடி வருவதாகத் தெரிகிறது.

    எனினும், இடப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி ஏழுமலையான கோவிலுக்குள் இருக்கும் லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களைத் தயாரிக்கும் மடப்பள்ளி முழுவதையும் கோவிலுக்கு வெளியில் கொண்டுவர தேவஸ்தானம் திட்டமிடுவதாக பக்தர்கள் குறை கூறியுள்ளனர். #Tirupati #Laddu


    திருமலையில் நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. #Tirupati #PlasticBan
    திருப்பதி:

    திருப்பதியில் கடந்த 2-ம் தேதி காந்தி ஜெயந்தி நாள் முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு நகராட்சி தடை விதித்தது.

    50 மைக்ரானுக்கும் கீழ் உள்ள பிளாஸ்டிக் கவர்கள், 2 லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்கள், தேனீர், காபி அருந்த பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட பேப்பர் கப்புகள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து திருப்பதி கோவிலிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்க கோரி திருப்பதி நகராட்சி அதிகாரிகள் தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    இதை தொடர்ந்து நாளை முதல் திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது. திருமலையில் உள்ள உணவகம் மற்றும் கடை உரிமையாளர்களிடம் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்தனர். அதில் திருமலையில் கற்கண்டு, பேரீச்சம் பழம், கடவுள் படங்கள், பைகள் உள்ளிட்டவை பிளாஸ்டிக் கவர்கள் சுற்றி விற்பனை செய்யப்படுகிறது. இனி அவற்றை தவிர்க்க வேண்டும்.

    திருமலையில் உள்ள உணவகங்களிலும் தேநீர், காபி, பால் அருந்துவதற்கு பிளாஸ்டிக்கினால் ஆன கப்புகள், கவர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என்று அதிகாரிகள் அவர்களிடையே அறிவுறுத்தினர். திருமலைக்கு வரும் பக்தர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் உடைமைகள், கடைகள், ஓட்டல்கள் என அனைத்து இடங்களிலும் திருப்பதி தேவஸ்தான சுகாதார ஆய்வாளர் கமிஷ்டி தலைமையில் நாளை முதல் திருமலை முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என சோதனை நடத்துகின்றனர்.

    மேலும் அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்கள் பொருட்களை சோதனை செய்யும்போதே பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தப்படும். அதனையும் மீறி கொண்டு வந்தால் ரூ. 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    லட்டுகளை போட்டுத் தரும் கவருக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை லட்டு கவர்களை மட்டும் பயன்படுத்த தேவஸ்தானம் நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி கோரியுள்ளது. #Tirupati #PlasticBan
    சபரிமலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக கேரள அரசு 3 பேர் குழுவை அமைத்துள்ளது. அவர்கள் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். #Tirupati #Sabarimala
    திருமலை:

    கேரள மாநிலம் சபரி மலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி அவர்களுக்கு அத்தியாவசிய வசதிகளை அளிக்க கேரள அரசு 3 பேர் குழு ஒன்றை அமைத்துள்ளது.

    அந்த 3 பேர் குழு திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    தேவஸ்தான செயல் அதிகாரி சீனிவாசராஜு கூட்ட நெரிசலை நிர்வகிப்பது குறித்து அவர்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.

    திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள தரிசன வசதிகள், தங்கும் வசதி, அன்னதானம், குடிநீர், கழிப்பிட வசதி, சுகாதாரம் பேணுதல், திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீரை சுத்திகரித்து அதை மரம், செடி, கொடிகளுக்கு பாசனம் செய்தல் உள்ளிட்டவை குறித்தும் அவர் விளக்கினார்.

    அதை உன்னிப்பாக கவனித்த கேரள குழுவினர், பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது என பாராட்டினர்.

    ஆலோசனைக் கூட்டத்தில் கேரள மாநில மக்கள் நலத்துறை தலைமை செயலர் கமலநாதன் ராவ், வருவாய்த் துறை தலைமைச் செயலர் ஜோதிலால், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி, அனந்தகிருஷ்ணன் மற்றும் தேவஸ்தானத்தின் அனைத்துத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×