செய்திகள்
கைதான பழனிச்சாமி, மணிகண்டன்.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் லாரிகள் திருடி விற்ற கொள்ளையர் 2 பேர் கைது

Published On 2017-06-24 05:43 GMT   |   Update On 2017-06-24 05:43 GMT
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் லாரிகள் திருடி விற்ற கொள்ளையர் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் திருடிய 3 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அடிக்கடி டிப்பர் லாரிகள் காணாமல் போனது.

திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றங்கல் பகுதியிலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு டிப்பர் லாரி மாயமானது.

இதுபற்றி லாரி உரிமையாளர்கள் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் கூறினர். இதையடுத்து லாரி திருடும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் திருட்டு போன லாரிகளின் பதிவு எண்கள் மூலம் அவற்றை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் லாரி திருட்டில் ஈடுபடும் கும்பல்கள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள வாகன திருட்டு கும்பல் குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், குமரி மாவட்டம் தக்கலையை அடுத்த குழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 42) என்பவர் கேரள மாநிலத்தில் பல லாரிகளை திருடி வெளிமாநிலங்களில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

அவரை ரகசியமாக கண்காணித்த கேரள போலீசார் 2 நாட்களுக்கு முன்பு தமிழக போலீசார் உதவியுடன் கோவையில் வைத்து கைது செய்தனர். கைதான மணிகண்டனுக்கு கேரளா மட்டுமின்றி தமிழகம், கர்நாடகா, மாராட்டியம் மற்றும் கோவா மாநிலங்களில் உள்ள வாகன திருட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதையும் போலீசார் தெரிந்து கொண்டனர்.

கேரளாவில் திருடும் லாரிகளை அதன் பதிவு எண்ணை மாற்றி, அண்டை மாநிலத்தில் விற்று விடுவதை மணிகண்டன் வழக்கமாக கொண்டுள்ளார்.

இதற்கு போலி ஆர்.சி. புக் மற்றும் ஆவணங்களை நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த பழனிச்சாமி (32) என்பவர் செய்து கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் இவரும் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் திருடிய 3 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கேரளா, தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட லாரிகளை திருடி விற்றதாக இவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அந்த லாரிகளை மீட்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மேலும் திருடிய லாரிகளை விற்பதற்கு துணைபோனவர்களை கண்டுபிடித்து கைது செய்யவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கேரள போலீசார் தமிழகம், கர்நாடகம், மராட்டியம் மற்றும் கோவா போலீசாருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.



Tags:    

Similar News