செய்திகள்

பாக். ராணுவ தளபதிக்கு கருணை மனு அனுப்பினார் குல்பூஷன் ஜாதவ்

Published On 2017-06-22 16:27 GMT   |   Update On 2017-06-22 16:27 GMT
மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறி அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், அவருக்கு தூதரக உதவிகள் மறுக்கப்பட்ட நிலையில், அவரது தண்டனையை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் தீர்ப்பு வரும்வரை குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மறுவிசாரணை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன், தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி ராணுவ தளபதி ஜாவித் பஜ்வாவுக்கு கருணை மனு அனுப்பியுள்ளார் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே, தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஜாதவ் மேல்முறையீடு செய்திருந்தார். அதை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News