செய்திகள்

பாலக்காடு அருகே போலீஸ் சோதனையில் 1 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

Published On 2017-06-21 04:58 GMT   |   Update On 2017-06-21 04:58 GMT
பாலக்காடு அருகே போலீஸ் வாகன சோதனையில் 1 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு அருகே கொடும்தரபள்ளி என்ற இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை பணியில் நேற்று இரவு ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் வந்தது. உடனே போலீசார் காரை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக கிளம்பி சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே, அந்த காரை போலீஸ் வாகனம் மூலம் பின் தொடர்ந்து விரட்டினர்.

சிறிதுதூரம் தள்ளி காரை போலீசார் விரட்டி மடக்கி பிடித்தனர். அந்த காரில் 4 பேர் இருந்தனர்.

காரை போலீசார் சோதனை செய்த போது அதில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ரூ.1 கோடிக்கு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் காரில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் ரூ.2½ லட்சமும் இருந்தது.


பின்னர் காரில் இருந்த 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பொள்ளாச்சி தெப்பக்குளம் வீதியை சேர்ந்த ராஜாமுகமது (42), மலப்புரம் அருகே மஞ்சேரியை சேர்ந்த அப்துல் (45), அப்துல் ரசீது (30), ஆலப்புழாவை சேர்ந்த விஜயகுமார் (47) என தெரிய வந்தது.

இதைதொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் 4 பேரிடம் செல்லாத நோட்டுகள் வந்தது எப்படி? எதற்காக காரில் கடத்தி சென்றனர்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து வருமான வரித்துறையினருக்கும் போலீசார் தகவல் கொடுத்தனர்.

Tags:    

Similar News