செய்திகள்

காஷ்மீரில் 1,300 இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வம்

Published On 2017-05-29 06:13 GMT   |   Update On 2017-05-29 06:14 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 1,300 இளைஞர்கள் ராணுவத்தில் சேர மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் மிரட்டலையும் மீறி தேர்வு எழுதினார்கள்.
ஸ்ரீநகர்:

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் சப்சார் அகமதுபட் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்துக்கு காஷ்மீர் மாநிலத்தின் பிரிவினைவாத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து அவர்கள் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து அனந்தநாத், புல்வாமா, சோபியான் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாடு முழுவதும் ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான தேர்வு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு இடங்களில் நடந்தது. ஸ்ரீநகரில் உள்ள மையத்திலும், பாரமுல்லா ராணுவ முகாமிலும் நடந்தது.

காஷ்மீர் இளைஞர்கள் ராணுவத்தில் சேர மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். பிரிவினைவாதிகளின் எதிர்ப்பையும் மீறி 1,300 பேர் ராணுவ பணிக்காக தேர்வை எழுதினார்கள். பாதுகாப்பு பணியில் சேர வேண்டாம் என்று தீவிரவாதிகள் ஏற்கனவே மிரட்டல் விடுத்து இருந்தனர். இதையும் பொருட்படுத்தாமல் காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வத்துடன் தேர்வில் பங்கேற்றனர்.

இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்ட போதிலும் இந்த மாநில இளைஞர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்பு அளிக்கும் நோக்கில் தேர்வை நடத்துகிறோம். ஸ்ரீநகர் மையத்தில் 815 பேர் பதிவு செய்து இருந்தனர். இதில் 799 பேர் தேர்வு எழுதினர். பாரமுல்லா மையத்தில் 500 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 493 பேர் தேர்வு எழுதினர்.

இதன்மூலம் இளைஞர்கள் பிரிவினைவாதிகளின் முழு அடைப்பை நிராகரித்து விட்டனர். அவர்கள் தங்களது பிரகாசமான எதிர்காலத்தை தேர்வு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News