செய்திகள்

பள்ளி ஆசிரியரை சுட்டு கொன்ற மாவோயிஸ்டுகள்: செல்போன் கோபுரத்துக்கு தீ வைப்பு

Published On 2017-05-28 10:55 GMT   |   Update On 2017-05-28 10:55 GMT
மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஜார்கண்ட் மாநிலமும் ஒன்று. இங்கு பள்ளி ஆசிரியர் ஒருவரை மாவோயிஸ்டுகள் சுட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
ராஞ்சி:

மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஜார்கண்ட் மாநிலமும் ஒன்று. இங்கு பள்ளி ஆசிரியர் ஒருவரை மாவோயிஸ்டுகள் சுட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள போகரா மாவட்டத்தில் உள்ள திஸ்கோபி என்ற கிராமத்துக்குள் 50-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர்.

அவர்கள் அந்த ஊரை சேர்ந்த பள்ளி ஆசிரியர் காளிச்சரன் மகோதா (வயது 40). வீட்டுக்குள் சென்றனர். பள்ளி ஆசிரியரிடமும், அவரது மனைவி, மகன்களிடமும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் காளிச்சரன் மகோதாவையும், அவரது மகனையும் வீட்டில் இருந்து வெளியே இழுத்து சென்றனர். பின்னர் மகனை மட்டும் அனுப்பி விட்டனர். சிறிது நேரம் கழித்து ஊருக்கு அருகே உள்ள காட்டு பகுதியில் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டது.

கிராம மக்கள் அங்கு சென்று பார்த்தனர். காளிச்சரன் மகோதா துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

காளிச்சரன் மகோதா மாவோயிஸ்டுகள் பற்றி போலீசுக்கு தகவல் கொடுப்பவராக இருந்ததாக கருதி அவரை சுட்டு கொன்றுள்ளனர்.

மாவோயிஸ்டுகள் ஊரை விட்டு செல்லும் போது, அங்கிருந்த செல்போன் கோபுரத்தை தீ வைத்து எரித்து விட்டு சென்றனர்.

காளிச்சரன் மகோதா கொல்லப்பட்ட இடத்தில் கையால் எழுதப்பட்ட சில நோட்டீசுகள் கிடந்தன. அதில், பன்னாட்டு நிறுவனங்களுடனும், மற்ற பல நிறுவனங்களுடனும் ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்தங்களை வாபஸ் பெற வேண்டும். இல்லை என்றால் மாநில அரசு பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் என்று எழுதப்பட்டு இருந்தது.

இதே பகுதியில் கடந்த 3 நாட்களில் 3 தாக்குதல்களை மாவோயிஸ்டுகள் நடத்தி உள்ளனர். முதலில் தும்ரி பிகார் ரெயில் நிலையத்துக்கு தீ வைத்தனர். அடுத்து சரக்கு ரெயில் என்ஜினுக்கு தீ வைத்தனர். இப்போது பள்ளி ஆசிரியரை சுட்டுக்கொன்றதுடன் செல்போன் டவருக்கும் தீ வைத்துள்ளனர்.
Tags:    

Similar News