செய்திகள்

ஆமதாபாத் குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கேரளாவில் கைது

Published On 2017-05-24 23:21 GMT   |   Update On 2017-05-24 23:21 GMT
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை கேரளாவில் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஆமதாபாத்:

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி, 21 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன.

இதில் 56 பேர் கொல்லப்பட்டதோடு, 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சிமி இயக்கம் உள்ளிட்ட சில பயங்கரவாத அமைப்புகள் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பொறுப்பேற்றன.

இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்ட முப்தி அபு பசீர் உள்ளிட்ட 2 பேரை குஜராத் போலீசார் ஏற்கனவே கைதுசெய்தனர். மேலும் மற்றொரு முக்கிய குற்றவாளியான சுஹைப் பட்டானிக்கல் என்பவரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் சுஹைப் பட்டானிக்கலை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சுஹைப் பட்டானிக்கல் சிமி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்றும், ஆமதாபாத் குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். 
Tags:    

Similar News