செய்திகள்

இங்கிலாந்து குண்டுவெடிப்பில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை: சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு

Published On 2017-05-24 00:41 GMT   |   Update On 2017-05-24 00:41 GMT
இங்கிலாந்து குண்டுவெடிப்பில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இங்கிலாந்து குண்டுவெடிப்பில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் நகரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இசைநிகழ்ச்சியின்போது பயங்கரவாதிகள் பயங்கர குண்டுவெடிப்பை நடத்தி உலுக்கி விட்டனர்.

இந்த கொடூர தாக்குதலில் மாணவிகள் சபி ரோஸ் ரூசோஸ் (8 வயது), ஜார்ஜினா காலண்டர் (18) உள்பட 22 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் நிலவியது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில், “மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்” என கூறி உள்ளார்.

மான்செஸ்டர் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை என முதலில் தகவல் கள் வந்தன. ஆனால் நேற்று மாலையில், இந்த தாக்குதலுக்கு உலகையே அச்சுறுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றனர்.

இது தொடர்பாக அவர்கள் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மான்செஸ்டரில் மக்கள் கூடியிருந்த இடத்தில், நமது போர்ப்படை வீரர்களில் ஒருவர் வெடிகுண்டினை வைக்க முடிந்தது” என கூறப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 23 வயதான வாலிபர் ஒருவரை தெற்கு மான்செஸ்டரில் போலீசார் நேற்று கைது செய்தனர். அவருடன் தொடர்புடைய இடங்களில் சோதனையும் நடத்தினர். இது குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

கைது செய்யப்பட்ட வாலிபரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மான்செஸ்டர் குண்டுவெடிப்புக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில், “மான்செஸ்டரில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். பலியானோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். படுகாயம் அடைந்தவர்கள் நலம்பெற பிரார்த்திக்கிறேன். இந்த துயரமான தருணத்தில் இங்கிலாந்து அரசுடனும், மக்களுடனும் இந்தியா இணைந்து நிற்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களும் மான்செஸ்டர் குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News