செய்திகள்

வாழ்க்கை சிதைந்து விட்டதாக கருதிய பெண்ணுக்கு தன்னம்பிக்கை கொடுத்த காதல்

Published On 2017-05-23 23:48 GMT   |   Update On 2017-05-23 23:48 GMT
ஆசிட் வீச்சால் வாழ்க்கையே உருக்குலைந்து போய் விட்டதே என மனம் உருகி நின்ற பெண்ணுக்கு காதல் கொடுத்த தன்னம்பிக்கையால் இப்போது மணக்கோலத்தில் பூரித்து நிற்கிறார்.
மும்பை:

ஆசிட் வீச்சால் வாழ்க்கையே உருக்குலைந்து போய் விட்டதே என மனம் உருகி நின்ற பெண்ணுக்கு காதல் கொடுத்த தன்னம்பிக்கையால் இப்போது மணக்கோலத்தில் பூரித்து நிற்கிறார்.

மராட்டிய மாநிலம் தானே கல்வா பகுதியை சேர்ந்த இளம்பெண் லலிதா பென் பான்சி. இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு சொந்த ஊரான உத்தரபிரதேசத்தில் திருமணம் நடக்க இருந்தது. திருமணத்திற்காக அந்த மாநிலத்தில் உள்ள அசாம்கார்க்கிற்கு சென்றார். அப்போது முன்விரோதம் காரணமாக இவரது சொந்த குடும்பத்தை சேர்ந்த படுபாவிகளே லலிதாபென் மீது திராவகத்தை வீசினர். இதில் அவரின் முகம் சிதைந்து போனது. திருமணமும் நின்று போனது.

கல்யாண கனவுகளுடன் சென்ற லலிதாபென்னிற்கு இது பேரிடியாக அமைந்தது. தனது முகத்துடன் சேர்ந்து வாழ்க்கையும் சிதைந்துவிட்டதாகவே கருதினார். வீட்டிலேயே முடங்கினார். இருப்பினும் மருத்துவர்களின் உளவியல் ஆலோசனைகளும், 17-க்கும் அதிகமான அறுவை சிகிச்சைகளும் அவருக்கு சிறிது தைரியம் அளித்தது.

இந்தநிலையில் 2 மாதங்களுக்கு முன் லலிதா பென் தன் செல்போனில் இருந்து தவறுதலாக மும்பை மலாடு பகுதியை சேர்ந்த சி.சி.டி.வி. ஆபரேட்டரான ராகுல் குமார் (27) என்ற வாலிபருக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டார். இதையடுத்து 2 பேருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அப்போது தங்களை பற்றி ஒருவரை ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது, ராகுல் குமார் அளித்த தன்னம்பிக்கை பேச்சால் மனபலம் பெற்ற லலிதா, அவர் மீது காதலில் விழுந்தார்.
உருவம் கடந்து உருவான இந்த காதலுக்கு 2 வீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

சமீபத்தில் மும்பை பரேல் பகுதியில் மாம்பழத்திருவிழா நடந்தது. அப்போது தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் கடையில் லலிதாபென் மாம்பழ விற்பனையாளராக இருந்தார்.

அங்கு வந்த தொழில்அதிபர் ருஷிகேஷ் கதம் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் நண்பர்களின் உதவியுடன் லலிதாபென்னின் திருமண செலவை ஏற்பதாக கூறினார். மேலும் பல்வேறு தரப்பினர் லலிதாபென்னின் திருமணத்திற்கு உதவ முன் வந்தனர்.

இந்தி நடிகர் விவேக் ஒபராய் லலிதாபென்னிற்கு திருமண பரிசாக தானேயில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வழங்குவதாக கூறினார். இந்த நிலையில் லலிதாபென், ராகுல் குமார் நேற்று தானேயில் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி தாதர் சிவாஜி பார்க் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அரங்கில் நடந்தது.இந்த விழாவில் திரைப்பட நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

பல்வேறு தனியார் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் திரளான பொதுமக்களும் மணமக்களை வாழ்த்தி அவர்களை இன்ப மழையில் நனைய வைத்தனர். எண்ணிலடங்கா பரிசுகளை அள்ளிக்கொடுத்தும் புதுமணத்தம்பதியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

ஆசிட் வீச்சால் இனி தன் வாழ்க்கை அவ்வளவு தான் என நினைத்துக் கொண்டிருந்த லலிதாவுக்கு, காதல் தன்னம்பிக்கையுடன் அழகான வாழ்க்கையையும் கொடுத்துள்ளது.

Tags:    

Similar News