செய்திகள்

மேற்குவங்க தலைமைச் செயலகம் முன்பு வன்முறை: இடதுசாரிகள், போலீஸ் இடையே மோதல்

Published On 2017-05-22 11:55 GMT   |   Update On 2017-05-22 11:55 GMT
மேற்குவங்கத்தில் தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் பிரச்சனைக்காக போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள் மீது போலீசார் தடியடி தாக்குதலில் ஈடுபட்டதால் வன்முறை ஏற்பட்டது.
கொல்கத்தா:

மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதான எதிர்க்கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. 

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள தலைமைச் செயலகம் நோக்கி விவசாயிகள் பேரணி நடைபெற்றது. பேரணி நடைபெறுவதை முன்னிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தலைமைச் செயலகம் முன்பு குவிக்கப்பட்டு இருந்தனர். தலைமைச் செயலகம் நோக்கி வந்தவர்களை கட்டுப்படுத்த தடுப்பரண்கள் அமைக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து, பேரணியில் ஈடுபட்டிருந்த இடதுசாரிகள் தடுப்பரண்களை மீறி உள்ளே நுழைய முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைக்க முயன்றனர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. 

போலீசார் மீது பேரணியில் ஈடுபட்ட இடதுசாரிகள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வன்முறையில் ஈடுபட்டதாக 10-க்கும் மேற்பட்ட இடதுசாரிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் போது முதல்வர் மம்தா பானர்ஜி தலைமைச் செயலகத்தில் இல்லை. நிர்வாக பணிக்காக பிர்பும் மாவட்டத்திற்கு சென்றிருந்தார்.
Tags:    

Similar News