செய்திகள்

மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி அனில் மாதவ் தவே திடீர் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

Published On 2017-05-18 05:04 GMT   |   Update On 2017-05-18 05:05 GMT
மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி அனில் மாதவ் தவே இன்று திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி

மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரியாக பதவி வகித்தவர் அனில் மாதவ் தவே. மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் துறை மந்திரியாக நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார்.

இந்நிலையில், அனில் மாதவ் தவே இன்று திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60. அவரது உடல் டெல்லியில் இருந்து சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்படுகிறது.

மத்திய மந்திரி அனில் மாதவ் தவே மறைவு குறித்த தகவலை பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் வாயிலாக தெரிவித்து, இரங்கல் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அனில் மாதவ் தவே மறைவு தனக்கு தனிப்பட்ட இழப்பு என குறிப்பிட்டுள்ள மோடி, மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியவர் தவே என புகழாரம் சூட்டியுள்ளார்.


நேற்று மாலை வரை அவருடன் தொடர்பில் இருந்ததாகவும், முக்கிய கொள்கை விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அனில் மாதவ் தவே உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். இதேபோல் மற்ற தலைவர்கள், மத்திய மந்திரிகளும் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

மத்திய மந்திரிகள் ஸ்மிருதி இரானி, சுரேஷ் பிரபு ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News